/ செய்திகள் / தேர்தல் நெருக்கத்திலும் துாக்கமா? அ.தி.மு.க., அணிகள் மீது புகார்

தேர்தல் நெருக்கத்திலும் துாக்கமா? அ.தி.மு.க., அணிகள் மீது புகார்

தேர்தல் பணிகள் எதையுமே செய்யாமல், அ.தி.மு.க., சார்பு அணிகள் சுணங்கி போய் உள்ளதாக, அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து, அ.தி.மு.க., அமைப்பு செயலர்கள் சிலர் கூறியதாவது: 'அ.தி.மு.க.,வின் 18 சார்பு அணிகளுக்கு, நிர்வாகிகளை நியமித்து, கட்சியை வலுப்படுத்த வேண்டும்' என பலரும் கூறியதையடுத்து, சார்பு அணிகளை வலுப்படுத்த கட்சியின் பொதுச் செயலர் பழனிசாமி உத்தரவிட்டார். இருப்பினும், எந்த அணிகளிலும் மாவட்ட அமைப்புகளை தாண்டி, ஒன்றிய, நகர அளவில் கூட நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், சார்பு அணிகள் தங்களின் அமைப்பு சார்பில் மாவட்டந் தோறும் போராட்டம் நடத்த பழனிசாமி உத்தரவிட்டார். ஆனால், பெயருக்கு ஒருசில மாவட்டங்களில் மட்டுமே போராட்டங்கள் நடந்தன. தமிழகத்தை உலுக்கிய கிட்னி திருட்டு புகாரின்போது கூட, மருத்துவர் அணி வெளியே வரவில்லை. நெல் கொள்முதல் பிரச்னையின்போது விவசாய அணியின் சத்தமே இல்லை. இப்படி தங்களின் துறை சார்ந்த பிரச்னையின்போதுகூட, எந்த அணியும் சிறு போராட்டம் கூட நடத்தவில்லை. ஜெயலலிதா இருக்கும்போது, அணிகள் அனைத்தும் தேர்தல் களத்தில் சுறுசுறுப்பாக செயல்படும். ஆனால், தேர்தல் நெருக்கத்தில் கூட, அணிகள் அனைத்தும் துாக்கத்தில் இருக்கின்றன. அணிகளை வலுபடுத்தி செயல்பட வைக்க பழனிசாமி பலமுறை உத்தரவிட்டும், எந்த பயனுமில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !