| ADDED : மார் 31, 2026 06:45 AM
அரசு நிர்வாகம் செயல்படவே இல்லை
ஆனந்தபிரியா, மாநில செயலர், தமிழக பா.ஜ., டாஸ்மாக் மது கடைகளும், அதிகரித்து வரும் போதைப்பொருள் பழக்கமும் தான் எல்லா துன்பங்களுக்கும் காரணம். தமிழகத்தில் தான் மது கடைகளில் இலக்கு வைத்து ஆண்டுக்கு, 50,000 கோடி ரூபாய்க்கு மது வகைகள் விற்கப்படுகின்றன. போதை பொருட்கள் சர்வ சாதாரணமாக கிடைக்கின்றன. பள்ளி சிறுவர்கள், கல்லுாரி மாணவர்கள் என, பல தரப்பினரும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். அவர்கள் நிலை தடுமாறி, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுகின்றனர். அண்ணா பல்கலை மாணவி, கோவை, விளாத்திகுளம் என, அனைத்து பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கும் போதை பொருட்கள் பழக்கமே காரணம். போதைப்பொருள் விற்பவர்கள் மீது, அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விழுப்புரம் மண்டல காவல் துறை அதிகாரிகளுடன், முதல்வர் ஸ்டாலின் ஆய்வுக்கூட்டம் நடத்திய இரு நாட்களுக்கு பின், அங்கு கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தனர். இதிலிருந்தே அரசு நிர்வாகம் எப்படி செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். கடந்த 30 ஆண்டுகளில் இந்த தி.மு.க., ஆட்சியில் தான், போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. அரசும் அரசு நிர்வாகமும் செயல்படவே இல்லை. பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர்!
ராஜாத்தி சல்மா, தி.மு.க., - எம்.பி., தமிழகத்தில் மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதில்லை. இந்தியா உட்பட உலகம் முழுதும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நடக்கின்றன. அரபு நாடுகளில் கூட இந்த பிரச்னை உள்ளது. அங்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முக்கிய காரணம் ஆண் என்ற திமிர் உடைய சிலரின் மனநிலையே காரணம். மது குடிக்கும் பழக்கம் இல்லாத நபர்களும் பெண்கள் மீது தாக்குதல், பாலியல் வன்முறை போன்ற கொடுமைகளை செய்கின்றனர். எனவே, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு, டாஸ்மாக் கடைகளை மட்டும் கைகாட்டி தப்பித்து கொள்ள முடியாது. பெண்கள் மீது மதிப்பும் மரியாதையும் இருக்க வேண்டும். தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது, அரசு கடும் நடவடிக்கைகளை விரைவாக எடுக்கிறது. இதனால், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் குறைவாக உள்ளன. பெண்களும் தங்களை போன்றவர்கள் என்று, ஆண்கள் சமமாக கருத வேண்டும். இதை, சமூகத்தில் பயிற்றுவிக்க வேண்டும். பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் பெண்களை யாரும் தொட மாட்டார்கள்.