Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


தமிழகத்தில் தொழில் வளர்ச்சி உண்மையா, மாயையா?

தமிழகத்தில் தொழில் வளர்ச்சி உண்மையா, மாயையா?

வசூல் அரசியலால் சிதையும் ‛இந்தியாவின் டெட்ராய்டு' என்ற பெருமை

ஆடிட்டர் எஸ்.சுந்தர்ராமன், தலைவர், தமிழக பா.ஜ., தொழில்துறை வல்லுனர் பிரிவு

கடன் வாங்குவதில் காட்டும் ஆர்வத்தை கல்வி, ஊரக வளர்ச்சியில் காட்டாதது, தமிழக அரசின் நிர்வாக தோல்வியையே பறைசாற்றுகிறது.

தென் கொரியாவின் ஹவாசுங் காலணி நிறுவனம், 1,720 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக, தொழில் துறை அமைச்சர் ராஜா அறிவித்தார். ஆனால், அந்நிறுவனத்தின் முதலீடு, ஆந்திர மாநிலத்தின் குப்பத்துக்கு சென்றுவிட்டது.

பாக்ஸ்கான் நிறுவனம், 15,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய போவதாக ராஜா தெரிவித்தார். இதை, அந்நிறுவனமே மறுத்தது.

'கூகுள்' நிறுவனம், தரவு மைய முதலீட்டை, ஆந்திராவின் விசாகப்பட்டினத்திற்கு கொண்டு சென்றபோது, அது, 'புவிசார் அரசியல், ராஜதந்திர பிரச்னை' என்று, ராஜா அபத்தமான விளக்கம் கொடுத்தார். இவை, தி.மு.க., அரசின் வெளிப்படைத்தன்மையற்ற போக்கையும், நிர்வாக சீர்கேட்டையும் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

தமிழக பொருளாதாரத் தின் முதுகெலும்பான சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை மெல்ல மெல்ல கொன்று வருகின்றனர். கடந்த 2022 முதல் மின்சார நிலை கட்டணம், 450 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. உற்பத்தி துறையில் தமிழகத்தின் பங்கு சரிவடைந்து வருகிறது.

பல தசாப்தங்களாக கட்டிக்காக்கப்பட்ட, 'இந்தியாவின் டெட்ராய்டு' என்ற பெருமை, அண்டை மாநிலங்களின் போட்டியால் அல்ல; தி.மு.க., அரசின், 'வசூல்' அரசியலால் சிதைத்து வருகிறது.

தமிழக தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசின் அறிக்கைகளே சான்று

எழிலன், எம்.எல்.ஏ., - தி.மு.க., மற்றும் மாநில திட்டக்குழு உறுப்பினர்

தி .மு.க., ஆட்சியில், 12.37 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டன; 35 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. இதனால், கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவாக, தமிழக பொருளாதார வளர்ச்சி, 11.19 சதவீதம் என்ற இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டி, தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்களை துவக்குவோருக்கு, 'ஸ்டார்ட் அப் டி.என்.,' நிறுவனம் வாயிலாக நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகள் செய்யப்படுகின்றன. தமிழக ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, உலக ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பு ஏற்படுத்த, சென்னை, கோவையில் ஸ்டார்ட் அப் மாநாடுகள் நடத்தப்பட்டன.

இதன் காரணமாக, 2021ல், 2,300 ஆக இருந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது, 12,500 ஆக அதிகரித்து, நாட்டிலேயே முன்னணியில் உள்ளது. தொழில் நிறுவனங்கள் அதிகரிப்பால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது, ஜி.எஸ்.டி., வரி வசூலில் எதிரொலிக்கிறது.

உற்பத்தி துறை, தோல் அல்லாத காலணி போன்ற துறைகளில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஏற்றுமதியில், 14வது இடத்தில் இருந்த தமிழகம், தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது. இவை அனைத்தும் மத்திய அரசு மற்றும், 'நிடி ஆயோக்' அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Advertisement