/ செய்திகள் /  முன்மாதிரி தொகுதியாக அவிநாசியை மாற்றுவேன் பா.ஜ., வேட்பாளர் முருகன் உறுதி

 முன்மாதிரி தொகுதியாக அவிநாசியை மாற்றுவேன் பா.ஜ., வேட்பாளர் முருகன் உறுதி

அன்னுார்: ''அவிநாசியை முன்மாதிரி தொகுதியாக உருவாக்குவேன்,'' என, பா.ஜ., வேட்பாளரான மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். கோவை மாவட்டம், அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில், அவிநாசி பா.ஜ., வேட்பாளர் முருகன் நேற்று வருகை தந்தார். கோவிலில் விநாயகர், சூரியன், சந்திரன், பைரவர், சனீஸ்வரர், தட்சிணாமூர்த்தி, அருந்தவ செல்வி அம்மன் மற்றும் மூலவர் மன்னீஸ்வரர் சன்னதிகளில் வழிபாடு செய்தார். சனீஸ்வரர் சன்னதியில் எள் தீபம் ஏற்றி வேண்டினால் வேண்டியது நடக்கும் என்பது ஐதீகம். முருகன் அங்கு எள் தீபத்தை ஏற்றி வழிபாடு செய்தார். அவர் பிரசாரம் செய்து பேசியதாவது : அவிநாசியை, தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியாக உருவாக்குவேன். அன்னூர் மற்றும் அவிநாசியில் உள்ள அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும். அன்னூர் வட்டார விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை மேட்டுப்பாளையம், கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்திற்கு கொண்டு செல்லும் அவலத்தைப் போக்க, அன்னுாரில் உழவர் சந்தை அமைக்கப்படும். போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படும். சொந்த கட்டடம் இல்லாத அன்னூர் தீயணைப்பு நிலையம் மற்றும் நீதிமன்றத்திற்கு சொந்த கட்டடம் அமைத்து தரப்படும். விடுபட்ட குளம், குட்டைகளுக்கு, அத்திக்கடவு அவிநாசி இரண்டாம் திட்டம் துவக்கி செயல் படுத்தப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !