குதிரை பேர விவகாரம்: காங்., - எம்.பி.,க்கள் மோதல்
- நமது நிருபர் -
குதிரை பேர விவகாரத்தில், காங்கிரஸ் எம்.பி.,க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி இடையே கருத்து மோதல் வெடித்துள்ளது.
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் நான்கு பேர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, உடனடியாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதை குறிப்பிட்டு, 'குதிரை வேகத்தில் குதிரை பேரம் நடக்கிறது' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
அவருக்கு பதிலடி அளித்து காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் வெளியிட்ட அறிக்கையில், 'அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து, வெளிப்படையாக த.வெ.க.,வில் இணைந்துள்ளனர். இதில் ஏன் இவ்வளவு கதறல்?' என கூறியிருந்தார்.
இந்நிலையில், அவர் சார்ந்துள்ள காங்கிரசை சேர்ந்த மற்றொரு எம்.பி., ஜோதிமணி வெளியிட்டுள்ள அறிக்கை: த.வெ.க., தேர்ந்தெடுக்கும் அனைத்து வழிமுறைகளையும் காங்கிரஸ் ஆதரிக்க முடியாது. குதிரை பேர அரசியலை காங்கிரஸ் கட்சியிலிருந்து யார் நியாயப்படுத்தினாலும், அது தவறானது.
தமிழகத்தில் குதிரை பேரத்தை ஆதரிக்கும்; தமிழகத்திற்கு வெளியே எதிர்க்கும் என்கிற இரட்டை நிலைப்பாட்டை, காங்கிரஸ் கட்சி ஒருபோதும் எடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து மாணிக்கம் தாகூர், ஜோதிமணி ஆதரவாளர்கள், சமூக வலைதளங்களில் ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டி, கண்டன பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்