/ செய்திகள் / த.வெ.க.,வுக்கு தாவும் பா.ஜ., இளைஞர்கள்: அண்ணாமலை என்ன முடிவெடுப்பார்?

த.வெ.க.,வுக்கு தாவும் பா.ஜ., இளைஞர்கள்: அண்ணாமலை என்ன முடிவெடுப்பார்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: தேர்தல் முடிவுகளால் துவண்டு போன பா.ஜ.,வைச் சேர்ந்த இளைஞர்கள் த.வெ.க.,வுக்கு மாறி வருகின்றனர். அண்ணாமலை போன்ற இளம் தலைமுறை தலைவர்களால்தான் இந்நிலையை மாற்ற முடியும் என பா.ஜ.,வினர் கருதுகின்றனர். தமிழக சட்டசபைத் தேர்தலில் எதிர்பாராத வகையில் இருபெரும் திராவிட கட்சிகளை வென்று த.வெ.க., ஆட்சியைப் பிடித்துள்ளது. பா.ஜ., ஏற்கனவே இருந்த 4 சீட்களில் 3 ஐ இழந்து ஒரே ஒரு சீட்டில் வென்றதால் செய்வதறியாது திகைப்பில் மவுனித்துள்ளது. சந்தித்த முதல் தேர்தலிலேயே த.வெ.க., வென்றதால் அக்கட்சியின் வெற்றிக்கு இளைஞர்களிடையே கிடைத்த வரவேற்பும், சமூகவலைத் தளமும்தான் காரணம் என்று தெரியவந்துள்ளது. மாற்றத்தை எதிர்பார்த்தவர்களுக்கு எந்தக் கட்சியிலும் நம்பிக்கை அளிக்கக் கூடிய இளைய தலைமுறை தலைவர்கள் யாரும் இல்லாதது பெரும்குறையாக பார்க்கப்படுகிறது. இவ்வகையில் சினிமா பிரபலத்துடன், புதிய மாற்றம் வேண்டியவர்களும் சேர்ந்து மற்ற கட்சிகளைப் பின்னுக்கு தள்ளிவிட்டதாக கருதுகின்றனர். பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, இளந்தலைமுறையை சேர்ந்தவர், ஐ.பி.எஸ்., அதிகாரியாக இருந்தவர், திராவிட கட்சிகளுக்கு குடைச்சல் கொடுத்தவர் என்ற காரணங்களால் பா.ஜ.,வுக்கு பெரும் எழுச்சியாக இருந்தார். அ.தி.மு.க., கூட்டணிக்காக அவரை பதவியில் இருந்து இறக்கியதை கட்சியில் இளந்தலைமுறையினர் பலரும் ரசிக்கவில்லை. எனவே இப்போது பெருந்தோல்வியை பெற்றதால், இளைஞர்கள் பலரும், குறிப்பாக அண்ணாமலை ஆதரவாளர்கள் பலர் த.வெ.க.,வுக்கு தாவி வருகின்றனர். பலர் அதிருப்தியில் உள்ளனர். மதுரை மாவட்டத்தில் விளையாட்டுப் பிரிவு உட்பட சில அணிகளில் இருந்த இளைஞர்கள் பலர் நாமக்கல் சென்று த.வெ.க., அமைச்சர் அருண்ராஜ் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளனர். இதுகுறித்து நிர்வாகி ஒருவர் கூறுகையில், ''மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் மகனால் கட்சியில் சேர்க்கப்பட்ட இளைஞர்கள் சிலரே கட்சி தாவி உள்ளனர். சித்தாந்த அடிப்படையில் உள்ள இளைஞர்கள் இன்னும் பா.ஜ.,வில்தான் தொடர்கின்றனர்'' என்றார்.

அண்ணாமலை முடிவு என்ன

பா.ஜ., ஐ.டி.,விங்க் மாநில செயலாளர் விஷ்ணுபிரசாத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது: சமூகவலைத் தளம் மூலம் வென்ற த.வெ.க., தலைவர் விஜய்யை இளைஞர்கள் பலர் நம்புகின்றனர். அரசியல் சூழல் மாறிவிட்ட நிலையில், அவரை இனி 10 ஆண்டுகள் அசைப்பது கடினம். இதனால் பா.ஜ., இளைஞர்கள் சிலர் அங்கு சென்றுள்ளனர். விஜய் போன்ற இளைஞருக்கு எதிராக படித்த, தொழில் முனைவோர், இளைஞர்களிடையே செல்வாக்கு பெற்ற அண்ணாமலை போன்றவர்களால்தான் செயல்பட முடியும். அதற்காக அண்ணாமலை புதுப்பாதையில் பயணிப்பார் எனத் தெரிகிறது. அவருக்கு ரஜினி, பா.ஜ.,வின் தேசிய தலைமையில் உள்ளவர்களின் ஆதரவும் கிடைக்கும். தேர்தல் முடிவுக்குப் பின் அமெரிக்கா சென்ற அவர் நேற்று பெங்களூரு திரும்பியுள்ளார். மே 28 ல் தமிழகம் வரும் அவர் பின்னர் அரசியலில் ஈடுபடுவார். முக்கியத்துவம் இல்லாத நிலையில் புதிதாக முடிவெடுப்பார் என்று இளைஞர்கள் பலரும் எதிர்பார்க்கின்றனர் என்றார்.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

M Ramachandran
ஜூன் 11, 2026 13:54

தவெகஒரு இந்து விரோத கட்சி இதற்கும் திமுகவிற்கும் அதிக வித்தியாசமில்லை. போக போக தெரியும். ஒரு முஸ்லீம் அமைச்சர் சனாதனத்தை ஒழிப்போம் என்று ஸ்டாலின் மகன் சொன்னதை ஆமோதிக்கிறேன் என்று சொன்ன ஒரு அமைச்சர் பதவியில் இருப்பவர்சொல்லாமா . முதலில் அவர் மதத்தில் இருக்கும் மூட நம்பிக்கையை ஒழிக்க பார்க்கட்டும். நடுநிலை அரசு என்றால் முதல்வர் பதவி வகிக்கும் ஜோசப் விஜய் இதை கண்டித்திருக்க வேண்டும். செய்யாத காரணம் என்ன. இவருக்கும் தமிழுக்கும் தமிழனுக்கும் என்ன சம்பந்தம். அவர்கள் முப்பாட்டன் தெலுங்கன் அதை மூடி மறைக்க இங்கே வேஷம் கட்டு றார். அதையும் சில மூடர்கள் நம்பி ஜால்றா தட்டுறான்.