/ செய்திகள் / மது வைக்க பிரிஜ் கேட்கும் தேர்தல் பார்வையாளர்களால் மாவட்ட அலுவலர்கள் அதிர்ச்சி

மது வைக்க பிரிஜ் கேட்கும் தேர்தல் பார்வையாளர்களால் மாவட்ட அலுவலர்கள் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தேர்தல் பார்வையாளர்களாக தமிழகம் வந்த அதிகாரிகள் சிலர், மதுபானம் வைக்க 'பிரிஜ்' கேட்டு அடம்பிடிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சட்டசபை தேர்தலுக்காக, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளுக்கு, வெளி மாநிலங்களைச் சேர்ந்த, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., மற்றும் மத்திய அரசு அதிகாரிகள், பொது பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ஒரு தேர்தல் செலவின பார்வையாளர் மற்றும் தேர்தல் காவல் பார்வையாளர் என நியமிக்கப்பட்டுள்ளனர்.சென்னை வந்துள்ள அவர்களுடன், மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி கமிஷனருமான குமரகுருபரன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், தேர்தல் பார்வையாளர் மற்றும் செலவினப் பார்வையாளராக வந்தவர்களில் சிலர், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தனி அறையில், 'பிரிஜ்' வசதி வேண்டும் என கேட்டுள்ளனர்.குறிப்பாக, 'மதுபானங்கள் வைப்பதற்கான வசதியுடன் 'பிரிஜ்' உள்ள அறை வேண்டும். மெரினா கடற்கரை பகுதியில் தங்கும் வசதி ஏற்படுத்திக் கொடுங்கள்' என, தேர்தல் அலுவலர்களிடம் வலியுறுத்தி உள்ளனர். இதனால், என்ன செய்வது என தெரியாமல் அலுவலர்கள் தவிக்கின்றனர்.இது குறித்து, சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்கள் கூறியதாவது: தேர்தல் பார்வையாளர்களாக, மத்திய அரசு அதிகாரிகள் தான் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஓரிருவர், அறையில் மதுபானம் வைக்க 'பிரிஜ்' வசதி இல்லை என வாக்குவாதம் செய்தனர். எங்களுக்கு தேவையான வசதியை செய்து தராவிட்டால், புகார் தெரிவிப்பதாக மிரட்டுகின்றனர்.சில அதிகாரிகள், கடற்கரையையொட்டி தங்கும் வசதி ஏற்படுத்தி தரும்படி கேட்டுள்ளனர். எனவே, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் பேசி, தேவையான வசதி செய்து தருவதாக கூறியுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !