/ செய்திகள் / மகளிர் ஓட்டுகளை குறி வைக்கும் தி.மு.க.,: 25 பெண் வேட்பாளர்களை களமிறக்குகிறது?

மகளிர் ஓட்டுகளை குறி வைக்கும் தி.மு.க.,: 25 பெண் வேட்பாளர்களை களமிறக்குகிறது?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சட்டசபை தேர்தலில், மகளிர் ஓட்டை குறி வைத்து, சென்னையில் இருவர் உட்பட, தமிழகம் முழுதும் மொத்தம், 25 பெண்களை வேட்பாளராக களமிறக்க, தி.மு.க, முடிவு செய்துள்ளது. இதற்காக, கட்சியில் அமைப்பு ரீதியாக செயல்படும், மூன்று மாவட்டங்களுக்கு, ஒரு மகளிர் வீதம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 2021 சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., சார்பில் 12 மகளிர் போட்டியிட்டனர். அவர்களில் ஆறு பேர் வெற்றி பெற்ற நிலையில், கீதா ஜீவன், கயல்விழி ஆகியோர் அமைச்சர்களாக உள்ளனர். ஆட்சிக்கு வந்த பின், பெண்களுக்கு இலவச பஸ் பயணம், 1.31 கோடி மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை ஆகிய திட்டங்களால், மகளிர் ஓட்டுகளை மொத்தமாக அறுவடை செய்யும் முயற்சியில் கட்சி மேலிடம் ஈடுபட்டுள்ளது. 'மகளிர் திட்டங்களால், பெண்களின் ஓட்டுகள் முழுதும் கிடைக்குமா; அதற்கு இன்னும் என்ன செய்ய வேண்டும்' என, தேர்தல் வியூக நிறுவனங்களுடன், சில தினங்களுக்கு முன், முதல்வர் ஸ்டாலின் தரப்பு ஆலோசித்துள்ளது. அப்போது, 'இலவச பஸ் பயணம் திட்டத்திற்கு மட்டும் பெண்களிடம் வரவேற்பு உள்ளது. தேர்தலில், தி.மு.க., வேட்பாளர்களாக 30 பெண்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்' என, ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தி.மு.க., அமைப்பு ரீதியாக செயல்படும் 77 மாவட்டங்களில், மூன்று மாவட்டங்களுக்கு ஒரு மகளிர் வீதம், குறைந்தது 25 தொகுதிகளில் பெண்களை வேட்பாளராக களமிறக்க, கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !