/ செய்திகள் / எடப்பாடியில் தி.மு.க., துாக்கம்; வெறிச்சோடிய தேர்தல் அலுவலகம்

எடப்பாடியில் தி.மு.க., துாக்கம்; வெறிச்சோடிய தேர்தல் அலுவலகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது சிறப்பு நிருபர்

திமுகவின், சேலம் மேற்கு மாவட்ட செயலர் செல்வகணபதியும், அவரது ஆதரவாளர்களும் முழு ஒத்துழைப்பு கொடுக்காததால், எடப்பாடி தொகுதி வேட்பாளர் காசி திணறி வருகிறார். இதனால், தேர்தல் பணியிலும் கட்சியினர் சுணக்கம் காட்டி வருகின்றனர். சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில், அ.தி.மு.க., பொதுச்செயலரும் முன்னாள் முதல்வருமான பழனிசாமி, எட்டாவது முறையாக போட்டியிடுகிறார். கடைசியாக நடந்த மூன்று தேர்தல்களிலும் வெற்றி பெற்றார். இடைப்பாடி தொகுதியில், 1971க்கு பின், தி.மு.க., வென்றது இல்லை. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக வெற்றி பெறாததால், இம்முறை வெற்றிபெற வேண்டும் என, தி.மு.க., தலைமை கட்டளையிட்டுள்ளது. இதற்காக, மேற்கு மாவட்ட செயலர் செல்வகணபதி பரிந்துரைத்த மாவட்ட துணை செயலர் சம்பத்குமார் உள்ளிட்ட பலரை தவிர்த்து விட்டு, அமைச்சர் வேலு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பரிந்துரைப்படி, கொங்கு வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த, ஜலகண்டாபுரம் டவுன் பஞ்சாயத்து தலைவர் காசி, வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் தொகுதி மக்களிடம் நன்கு அறிமுகமானவர். ஜவுளி தொழில் செய்கிறார்; 'பசை'யானவர். இதையடுத்து, தி.மு.க., கூட்டணி கட்சிகளின் தலைமை தேர்தல் அலுவலகம், இடைப்பாடி ஒன்றிய அலுவலகம் எதிரே, சேலம் பிரதான சாலையில், கடந்த 8ல் திறக்கப்பட்டது. மாவட்ட செயலர் செல்வகணபதி திறந்து வைத்தார். கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இது குறித்து, தி.மு.க.,வினர் கூறியதாவது: எடப்பாடியில், மாவட்ட செயலர் பரிந்துரைத்தவருக்கு சீட் வழங்கப்படவில்லை. பழனிசாமி கொங்கு வெள்ளாள கவுண்டர் என்பதால், தி.மு.க.,வில் வன்னியரை நிறுத்தியிருந்தால் போட்டி கடுமையாக இருந்திருக்கும். ஆனால், தலைமை அதை செய்யவில்லை. இதனால், தி.மு.க., மாவட்ட செயலரும், அவரது ஆதரவாளர்களும் பெயரளவுக்கு தேர்தல் பணி செய்கின்றனர். கட்சி பேச்சாளர் பிரசாரத்துக்கு வருவதை கூட, முதல்நாளே தகவல் தெரிவிக்காமல், விளம்பரப்படுத்தாமல் உள்ளனர். தி.மு.க.,வினரே இப்படி என்பதால், கூட்டணி கட்சியினரும் ஆர்வம் காட்டவில்லை. வேட்பாளர் காசியும், அவருக்கு வேண்டப்பட்டவர்களை மட்டும் அழைத்துக்கொண்டு பெயரளவுக்கு பிரசாரத்துக்கு செல்கிறார். தி.மு.க., தேர்தல் அலுவலகத்துக்கு கட்சியினரோ, கூட்டணி கட்சியினரோ வருவதில்லை என்பதால் வெறிச்சோடி காணப்படுகிறது. இவ்வாறு கூறினர்.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !