/ செய்திகள் / முருகன் மீது முழு நம்பிக்கை: விஜய் கடிதம்

முருகன் மீது முழு நம்பிக்கை: விஜய் கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துாத்துக்குடி: த.வெ.க., தலைவர் விஜய், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். த.வெ.க., தலைவர் விஜய், நேற்று முன்தினம் இரவு, தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து மதுரை சென்றார். அங்கிருந்து கார் மூலம், அதிகாலை 4:00 மணிக்கு அவர் திருச்செந்துார் வந்தார். பேட்டரி கார் மூலம் கடலுக்கு சென்று கால் நனைத்துவிட்டு, அங்கிருந்து சுவாமி தரிசனம் செய்ய புறப்பட்டார். கோவில் வளாகத்தில் திரண்டிருந்த தொண்டர்களும் பக்தர்களும் அவரை சூழ்ந்து, 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர். கூடியிருந்த பக்தர்களை பார்த்து கை அசைத்தபடி கோவிலுக்குள் சென்றார் விஜய். பட்டு வேட்டி, சட்டையில் வந்திருந்த அவருக்கு த.வெ.க., நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கையில் வேலுடன் கோவிலுக்குள் அவர் சென்றார். அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததைத் தொடர்ந்து, விஸ்வரூப தரிசனத்தில் அவர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். மூலவர் சுப்பிரமணியர் சன்னிதி முன்பு தரையில் அமர்ந்து மனமுருக முருகனை வேண்டி விஜய் பிரார்த்தனை செய்தார். சண்முகர், வள்ளி, தெய்வானை, தட்சிணாமூர்த்தி, பெருமாள், சூரசம்ஹார மூர்த்தி உள்ளிட்ட அனைத்து சன்னிதிகளிலும், அவர் தரிசனம் செய்தார். சம்ஹார சன்னிதி முன், அவர் நீண்ட நேரம் அமர்ந்திருந்து வழிபட்டார். சுவாமி தரிசனம் முடிந்து வெளியே வந்த விஜயை கண்டதும், அவரை சூழ்ந்து கொண்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். பின், காரில் துாத்துக்குடி புறப்பட்டு சென்றார். அங்கிருந்து தனி விமானம் மூலம் அவர் சென்னை புறப்பட்டார்.

கோவிலில் கடிதம்

விஜய், கிறிஸ்துவர் என்பதால், 'திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி மீது முழு நம்பிக்கை வைத்துள்ளேன். அதனால், அவரை தரிசனம் செய்ய வந்துள்ளேன் -- சி.ஜோசப் விஜய்' என எழுதி கையெழுத்திட்டு, திருச்செந்துார் கோவில் நிர்வாகத்திற்கு விஜய் ஒரு கடிதம் கொடுத்தார். ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஹிந்து மதத்தினரை தவிர மாற்று மதத்தினர் கோவிலுக்கு வரும்போது, அவர்களிடம் கடிதம் பெற்ற பின்பே தரிசனத்திற்கு அனுமதிப்பது நடைமுறை. அந்த அடிப்படையில் கடிதம் பெறப்பட்ட பின்பே, தரிசனம் செய்ய அவர் அனுமதிக்கப்பட்டார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !