/ செய்திகள் / பாரபட்சமின்றி ஓட்டுக்கு பட்டுவாடா; வி.ஐ.பி., தொகுதிகளில் மட்டும் ரூ.2,500!

பாரபட்சமின்றி ஓட்டுக்கு பட்டுவாடா; வி.ஐ.பி., தொகுதிகளில் மட்டும் ரூ.2,500!

சென்னை: சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று நடக்கிறது. வாக்காளர்களை கவர, தி.மு.க., - அ.தி.மு.க., வேட்பாளர்கள், பெரும்பாலான தொகுதிகளில் பாரபட்சமின்றி வாக்காளருக்கு 1,000 ரூபாயும், அவினாசி, கோவை வடக்கு உட்பட பா.ஜ., வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில், தி.மு.க.,வினர் தலா, 2,500 ரூபாயும் வழங்கி உள்ளனர். இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில், 200க்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என, தி.மு.க.,வினருக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த தேர்தலில், 210 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனி சாமியும் கூறி வருகிறார். எனவே, இரு கட்சிகளின் வேட்பாளர்களும், நிர்வாகிகளும் எப்படியாவது வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முடிவில் உள்ளனர். ஒரு கட்சி சார்பில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யும்போது, அதை வேறொரு கட்சியினர், தேர்தல் பறக்கும் படையினரிடம் பிடித்துக் கொடுத்தால், பணம் கிடைக்காதவர்கள் அவர்களுடன் தகராறு செய்கின்றனர். எனவே, இந்த தேர்தலில் தி.மு.க., - அ.தி.மு.க., வேட்பாளர்கள் நேரடியாக மோதும் பெரும்பாலான தொகுதிகளில், வாக்காளர்களுக்கு பாரபட்சமின்றி தலா, 1,000 ரூபாய் வழங்கியுள்ளனர். இந்த பணி, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நேற்று முன்தினம் வரை நடந்தது. பா.ஜ., போட்டியிடும் 27 தொகுதிகளில், 18ல் தி.மு.க.,வுடன் நேரடியாக மோதுகிறது. இந்த தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று, கட்சியினருக்கு தி.மு.க., தலைமை உத்தர விட்டுள்ளது. எனவே, மத்திய அமைச்சர் முருகன் போட்டியிடும் அவினாசி, பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிடும் சாத்துார், தேசிய மகளிரணி தலைவர் வானதி போட்டியிடும் கோவை வடக்கு, பா.ஜ., வசமுள்ள மொடக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் வாக்காளர்களுக்கு தலா, 2,500 ரூபாய் வரை தி.மு.க.,வினர் பட்டுவாடா செய்துள்ளனர். இதில், மொடக் குறிச்சி தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.க., போட்டியிடுகிறது. மற்ற தொகுதிகளில் தலா, 1,500 - 2,000 ரூபாய் என எதிர்க்கட்சிகள் வழங்கியதை விட, 500 ரூபாய் கூடுதலாக தி.மு.க.,வினர் வழங்கி உள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

MuthuKumar
ஏப் 23, 2026 20:16

கோவை தெற்கிலும் வடக்கிலும் ஒரு நபருக்கு ஐயாயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது


Shahjahan
ஏப் 23, 2026 15:04

EC failed to control money distribution as most of the officials are dmk sympathisers


venugopal, s
ஏப் 23, 2026 14:09

இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இதை ஒருவராலும் ஒன்றும் செய்ய முடியாது. தடுக்க முடியாது. சும்மா வெத்து வேட்டு சிஸ்டம்


வீரபாண்டி
ஏப் 23, 2026 14:08

ஓட்டுக்கள் என்பது என்றும் விதிக்கப்பட கூடாது பணம் பட்டுவாடா தடுக்கப்பட வேண்டும்


குமார்
ஏப் 23, 2026 14:07

பணம் பட்டுவாடாவை அனைத்து தேர்தலிலும் தடுத்து நிறுத்த வேண்டும் இதுதான் சட்ட விதிகள் ஆனால் ஓட்டுகள் விற்கப்படுகிறது