சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தோல்வியை எதிர்கொண்ட நிலையில், அ.தி.மு.க., கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது. சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. 47 இடங்களில் வென்ற அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில், 25 எம்.எல்.ஏ.,க்கள் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு அளித்துள்ளனர். தேர்தலுக்கு முந்தைய கூட்டணி முடிவுக்கு வந்து விட்டதாக, அ.தி.மு.க., வேலுமணி தரப்பு அறிவித்துள்ளது. இந்நிலையில், சட்டசபையில் நேற்று, முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தலைமையிலான 22 எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு தெரிவித்து ஓட்டளித்தனர். ஆனால், அ.தி.மு.க., கூட்டணியில் வென்ற பா.ம.க.,வின் நான்கு எம்.எல்.ஏ.,க்களும், பா.ஜ.,வின் ஒரே எம்.எல்.ஏ.,வான ஊட்டி போஜராஜனும், பழனிசாமியின் முடிவுக்கு மாறாக, நடுநிலை வகித்தனர். இதன் வாயிலாக, அ.தி.மு.க., கூட்டணியில் நாங்கள் இல்லை என, பா.ஜ.,வும், பா.ம.க.,வும் உறுதிப்படுத்தியுள்ளன. இதுதொடர்பாக, பா.ம.க., நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, 'அ.தி.மு.க., பிளவுபட்டுள்ளதால், இனி அதன் தலைமையிலான கூட்டணியில் இருப்பதில், எந்த பலனும் இல்லை. 'பா.ம.க., தலைவர் அன்புமணியை, அவரது வீட்டிற்கே சென்று முதல்வர் விஜய் சந்தித்துள்ளார். இதனால், த.வெ.க.,வுடன் இணக்கமாக செல்ல அன்புமணி முடிவு செய்துள்ளார்' என்றார்.