/ செய்திகள் / ரூ.8000 கூப்பன் திட்டம் இதற்குத்தான்; காரணம் சொல்கிறார் கனிமொழி

ரூ.8000 கூப்பன் திட்டம் இதற்குத்தான்; காரணம் சொல்கிறார் கனிமொழி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ரூ.8000 மதிப்புள்ள இல்லத்தரசி கூப்பன் திட்டம் ஏன் என்று திமுக எம்பி கனிமொழி விளக்கம் அளித்துள்ளார்.திமுக துணை பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தலைமையிலான 12 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களின் கருத்துகளை கேட்டது. அதன் அடிப்படையில் தேர்தல் அறிக்கையை தயாரித்து முதல்வர் ஸ்டாலினிடம் இந்த குழு ஒப்படைத்தது.இதைத்தொடர்ந்து, தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் வெளியிட்டார். மொத்தம் 50 தலைப்புகளில் மொத்தம் 525 தேர்தல் வாக்குறுதிகள் இதில் இடம்பெற்று இருந்தது. இதில் இல்லத்தரசி கூப்பன் என்ற புதிய வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் ரூ.8000 மதிப்புள்ள வீட்டு உபயோக பொருள் கூப்பன் இல்லத்தரசிகளுக்கு அளிக்கப்படும், அதனைக் கொண்டு அவர்கள் விரும்பிய வீட்டு உபயோக பொருட்களை கடைகளில் வாங்கிக் கொள்ளலாம் அல்லது பழைய பொருட்களை மாற்றிக் கொள்ளலாம் என்றார். திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின்னர் இல்லத்தரசி கூப்பன் என்ற வாக்குறுதி குறித்து நிருபர்கள் கனிமொழி எம்பியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு: ஒரு பொருளை கொடுக்கும்போது, அது அவர்களின் வீட்டில் ஏற்கனவே இருக்கலாம் அல்லது அவர்களுக்கு பயன்படுத்த முடியாத ஒரு சூழலாக இருக்கலாம். தேவையில்லாத ஒன்றாக இருக்கலாம். அதனால் ஒரு சாய்சை(Choice) மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று முதல்வர் நினைத்தார். அதனால் தான் இந்த கூப்பனை கொடுத்து, அவர்களின் வீட்டில் ஏற்கனவே இருக்கக்கூடிய பொருளை அப்கிரேடு (up grade) பண்ணுவதற்கும் அது பயன்படும். இல்லை என்றால் அவர்களின் வீட்டுக்கு அவர்கள் எது தேவை என்று நினைக்கிறார்களோ, அதை அவர்கள் வாங்கமுடியும்.அதுமட்டும் இல்லாமல், நிச்சயமாக பக்கத்தில் இருக்கக்கூடிய கடைகளில், ஒவ்வொரு பகுதிகளிலும் அருகில் இருக்கக்கூடிய கடைகளில் தான் அவர்கள் போய் வாங்க போகின்றனர். அங்கே இருக்கக்கூடிய வியாபாரிகளுக்கு மிக பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்கும். இங்கே உள்ள தயாரிப்பாளர்கள், தொழில் முனைவோர்களுக்கு பயன்படக்கூடிய வகையில் நிச்சயமாக இருக்கும்.இவ்வாறு கனிமொழி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !