/ செய்திகள் / பெண்களுக்கு ரூ.5,000: தலைவர்கள் கிண்டல்
பெண்களுக்கு ரூ.5,000: தலைவர்கள் கிண்டல்
சென்னை : 'மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில், 5,000 ரூபாய் கொடுத்து, அடுத்த ஐந்தாண்டுகள் கொள்ளையடிக்க, தி.மு.க., வினர் துடிக்கின்றனர்' என அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:
தி.மு.க., அரசு, மகளிர் உரிமைத்தொகை என்ற பெயரில், எந்த மாதமும் இல்லாமல், திடீரென, 5,000 ரூபாய் முன்பணமாக, வங்கி கணக்கில் வரவு வைத்துள்ளது. இவை தேர்தல் வருவதை கணக்கிட்டு, மக்களின் ஓட்டை பறிக்கும் சூழ்ச்சி. நீண்ட நாட்களாக திட்டமிட்டு, மிகவும் ரகசியம் காத்து, ஒரே நாளில், 1.31 கோடி பேரின் வங்கி கணக்குகளில், 5,000 ரூபாய் செலுத்துவதில், நேர்த்தியாக தி.மு.க., அரசு செயல்பட்டுள்ளது. அடுத்த ஐந்தாண்டுகள் கொள்ளையடிக்க பார்கின்றனர். தி.மு.க.,வின் ஓட்டு பறிக்கும் திருட்டுத்தனத்திற்கு, மக்கள் பாடம் புகட்டுவர்.முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு:
துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தி.மு.க., அரசை கண்டித்து நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது: கோடை காலம் ஆண்டுதோறும் வரும். இந்த ஆண்டு மட்டும் தமிழக மக்கள் மீது அவ்வளவு அக்கறை ஏன்? கரிசனம் என்ன? பாசம் என்ன? என கேட்டால் தேர்தல் வருகிறதுதான் காரணம்.தேர்தலுக்காக கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்களை ஏமாற்றிவிட்டு கடைசியாக 50 நாட்களில் மூன்று மாதம் கொடுக்க வேண்டிய தொகையை சேர்த்துக் கொடுத்துள்ளார்களாம். 2000 ரூபாய் கோடைகால சிறப்பு நிதியாம்? ஐந்து ஆண்டுகளாககோடைகால சிறப்பு நிதி எங்கே போனது?. இவ்வாறு அவர் பேசினார்.புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி:
முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள ரூ.5 ஆயிரம் மகளிர் உதவித்தொகை தேர்தலுக்கான வித்தை. அரசு பணத்தில் ஓட்டு சேகரிக்கும் தி.மு.க.,வின் போக்கை தடுக்க தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்த வேண்டும்.கடந்த 5 ஆண்டுகால தி.மு.க., ஆட்சியில், போதை கலாசாரம், பணி நியமன ஊழல், விலைவாசி உயர்வால் அனைவரும்அதிருப்தியில் உள்ளனர்.கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. இதனை மடைமாற்ற ரூ.5000 மகளிர் உரிமைத் தொகை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இயற்கை பேரிடர் காலங்களில் நிவாரணத் தொகை வழங்குவர். ஆனால், 'கோடைகால நிவாரணம்' என்று ஒரு புதிய கரடியை முதல்வர் அவிழ்த்து விட்டுள்ளார்.அ.ம.மு.க. பொதுச் செயலர் தினகரன்:
தமிழகத்தில், மகளிருக்கு 5,000 ரூபாய் மட்டுமில்லை, 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும், தி.மு.க., தோல்வியடையப் போவது உறுதி. தோல்வி பயத்தில், எத்தனை அறிவிப்புகளை வெளியிட்டாலும், தமிழக மக்கள் மத்தியில், ஒருபோதும் எடுபடாது. தேர்தல் கமிஷன் நடவடிக்கைகளை காரணம் காட்டி, இதுபோன்ற அறிவிப்புகளை, முதல்வர் ஸ்டாலின், அவசரகதியில் வெளியிட்டிருப்பதன் பின்னணியில் இருப்பது, தி.மு.க.விற்கு ஏற்பட்டிற்கும், தேர்தல் தோல்வி பயம் தானே தவிர, மகளிர் மீதான உண்மையான அக்கறை இல்லை. எனவே, தோல்வி பயத்தில், தி.மு.க., எடுக்கும் எந்தவித அஷ்திரமும், எடுபடாது. தி.மு.க.விற்கு, வரும், சட்டசபை தேர்தலில், அனைத்து தரப்பு மக்களும் இணைந்து, படுதோல்வியைப் பரிசாக வழங்கப்போவது உறுதி.பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்:
மோடி மஸ்தான் வேலை என்பது போல், தேர்தலுக்காக எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றலாம் என்பதில் முதல்வர் கைதேர்ந்தவர். தற்போது, 5 ஆயிரம் ரூபாய் தந்து, தேர்தலில் வெற்றி பெற்றால் உரிமைத்தொகையை, 2 ஆயிரமாக உயர்த்தித் தருவதாக அறிவித்துள்ளார்.மகளிர் உரிமைத்தொகையை தடுத்து நிறுத்த நினைத்தால், முன்பே நிறுத்தி இருப்போம். முதல்வர் அறிவிப்பில், கோடைகால விடுமுறைக்கு, 2 ஆயிரம் ரூபாய் என்பது ஆச்சர்யமாக உள்ளது. இது தேர்தலுக்கான அச்சாரம். தமிழகத்தில் கஞ்சா விற்பனை, பாலியல் பிரச்னை, வயதானவர்களுக்கான அச்சுறுத்தல் என, நாட்டில் நடக்கும் அனைத்து சட்டம் ஒழுங்கு பிரச்னைகளையும் மறைக்க, 5 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளனர். இதற்கு முன்னர் பொங்கலுக்கு, கோடைகால விடுமுறைக்கு பணம் கொடுக்கவில்லை. தேர்தல் வருவதால் அச்சரமாக பணத்தை கொடுத்துள்ளனர். இதைப்பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள். இவர்கள் தேர்தலில் வெற்றி பெறவும் முடியாது.பா.ம.க., தலைவர் அன்புமணி:
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், 1.31 கோடி பெண்களின் வங்கி கணக்குகளில், தி.மு.க., அரசு திடீரென 5,000 ரூபாயை வரவு வைத்துள்ளது. ஆட்சி கையை விட்டுப் போவது உறுதியானதை உணர்ந்து கொண்ட தி.மு.க., தோல்வியின் வெளிப்பாடாகவே இதை செய்துள்ளது. இந்த கபட நாடகங்கள் மக்களிடம் எடுபடாது.அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும், 1,000 ரூபாய் வழங்குவதாக அறிவித்த தி.மு.க., ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பத் தலைவிகளுக்கு, உரிமைத் தொகை வழங்க முடியாது என்று அறிவித்தது. அந்த துரோகத்தை அவர்கள் இன்னும் மறக்கவில்லை.ஒரே முறை 5,000 ரூபாயை வழங்குவதன் வாயிலாக, மக்களை ஏமாற்றி விட முடியாது. வரும் தேர்தலில் தி.மு.க., வீழ்த்துவது என்ற முடிவில் இருந்து, மக்கள் பின்வாங்க மாட்டார்கள்.தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am