/ செய்திகள் / சென்னையில் பேசாமல் பிரசாரம் செய்த விஜய்!

சென்னையில் பேசாமல் பிரசாரம் செய்த விஜய்!

சென்னை: சென்னையில் மூன்று இடங்களில் பிரசாரத்துக்கு அனுமதி வாங்கிய த.வெ.க., தலைவர் விஜய் எங்குமே பேசவில்லை; 'ரோடு ஷோ' வாயிலாக மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். சென்னையில் நேற்று தி.நகர், ஆயிரம் விளக்கு, எழும்பூர் ஆகிய மூன்று தொகுதிகளில் பிரசாரம் செய்ய, விஜய்க்கு அனுமதி தரப்பட்டு இருந்தது. அதன்படி, நீலாங்கரையில் தன் வீட்டில் இருந்து புறப்பட்டு, தி.நகர் நியூ போக் சாலைக்கு மாலை 4:10 மணிக்கு வந்தார். வேனில் நின்றபடி கையசைத்த விஜய், ஐந்து நிமிடங்களில் அங்கிருந்து கிளம்பி விட்டார். அடுத்தபடியாக, ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட வள்ளுவர் கோட்டத்தில் பிரசாரம் செய்ய அனுமதி வாங்கப்பட்டது. ஆனால், அங்கும் விஜய் பேசாமல், வேனில் நின்றபடி கையசைத்து சென்றார். இறுதியாக, எழும்பூர் ரித்தர்டன் சாலையில் விஜய் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கூட்டம் அதிகமாக இருந்ததால், போலீசாரின் அறிவுரைப்படி விஜய் அங்கு செல்லவில்லை. எனினும், பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில், வேனில் நின்றபடி, மக்களை பார்த்து விஜய் கையசைத்தார். சென்னையில், நேற்று எந்த இடத்திலும் விஜய் பேசாததால், தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மாலை 6:10 மணிக்கு விஜய் பிரசாரத்தை முடித்துக் கொண்டார். சென்னையின் முக்கிய சாலைகளில் ரோடு ஷோ மேற்கொண்டதால், விஜயை பின்தொடர்ந்து, கட்சியினர் இருசக்கர வாகனத்தில் சென்றனர். இதனால், தி.நகர், வள்ளுவர் கோட்டம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணா சாலை, சென்ட்ரல் ரயில் நிலைய பகுதி, கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 6 சவரன் நகை திருட்டுத.வெ.க., தலைவர் விஜய் நேற்று தி.நகரில் தொடங்கி எழும்பூர் வரை முக்கிய சாலை வழியாக ரோடு ஷோ நடத்தினார். விஜயை காண ஆயிரக்கணக்கானோர் கூடினர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி கோடம்பாக்கம் சக்தி நகரைச் சேர்ந்த திவ்யா என்பவரிடம் 6 சவரன் செயினை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.அதே போல், கூட்டத்தில் 10 பேரின் மொபைல்போன்களும் திருடப்பட்டது. பாதிக்கப் பட்டவர்கள் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !