/ செய்திகள் / கூடுதல் ஓட்டுப்பதிவால் கவலையில் திரிணமுல்; ஜனநாயகம் வென்றதாக பிரதமர் பெருமிதம்

கூடுதல் ஓட்டுப்பதிவால் கவலையில் திரிணமுல்; ஜனநாயகம் வென்றதாக பிரதமர் பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் பாஜ ஆட்சியமைந்தவுடன் அங்கு நடந்த அநீதி மற்றும் அராஜகங்களுக்கு எதிரான வழக்குகள் மீது மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று பிரதமர் மோடி உத்தரவாதம் அளித்துள்ளார். மேற்கு வங்கத்தில் நேற்று நடந்த முதற்கட்ட தேர்தலில் 92 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. இது மேற்கு வங்க தேர்தல் வரலாற்றிலேயே அதிகபட்ச வாக்கு சதவீதமாகும். தொடர்ந்து, ஏப்ரல் 29ம் தேதி 2வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, பிரதமர் மோடி இன்று மேற்கு வங்கத்தில் பிரசாரம் செய்தார்.டம்டம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது; பாஜவிற்கு கிடைத்து வரும் பலத்த ஆதரவு கட்சியின் வெற்றியை உறுதி செய்து விட்டது. திரிணமுல் காங்கிரஸ் ஜனநாயகக் கோயிலைச் சிதைத்துவிட்டது. முதற்கட்ட தேர்தலின் மூலம் மேற்கு வங்க மக்கள் அதை மீண்டும் கட்டியெழுப்பி விட்டனர். முதற்கட்டத் தேர்தலில் பதிவான அதிகப்படியான ஓட்டுகள் ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. இது தேர்தல் செயல்முறையின் மீது மக்களுக்கு உள்ள வலுவான நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. மக்கள் ஆர்வமாக தேர்தலில் பங்கேற்பது திரிணமுல் காங்கிரஸை கவலை அடையச் செய்துள்ளது. இது மாற்றத்திற்கான அறிகுறியாகும். மே 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, மேற்கு வங்கத்தில் திரிணமுல் குண்டர்கள் ஒளிந்து கொள்ள இடமே இருக்காது. அவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது. திரிணமுல் காங்கிரஸின் காட்டு ஆட்சியை முதற்கட்ட ஓட்டெடுப்பு முடிவுக்கு கொண்டு வந்துவிட்டது. திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியில் பல ஆண்டுகளாக அனுபவித்து வரும் துயரங்களிலிருந்து மாநிலத்தை விடுவிக்க பாஜவிற்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்.பாஜ ஆட்சி அமைந்தால் திரிணமுல் காங்கிரஸின் ஊழல், அராஜகம் ஆகியவற்றிலிருந்து விடுதலை கிடைக்கும். மேற்கு வங்கத்தின் இழந்த பெருமையை மீட்டெடுக்கப்படும். திரிணமுல் காங்கிரஸ் பெண்களுக்கு எதிரான கட்சி. பாஜக ஆட்சி எப்போதும் பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும். மே 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகி, பாஜ ஆட்சி அமைந்தவுடன், மேற்கு வங்கத்தில் நடந்த ஒவ்வொரு அநீதி மற்றும் அட்டூழியம் தொடர்பான கோப்புகளும் மீண்டும் திறக்கப்படும். தவறுகள் நடந்ததாகக் கூறப்படும் அனைத்து வழக்குகளும் முறையாக விசாரிக்கப்படும். இது மோடியின் உத்தரவாதம், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !