Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


தேர்தலில் தீப்பிடிக்குமா எரிபொருள் விலை? ஆர்.எஸ்.பாரதி Vs தமிழிசை

தேர்தலில் தீப்பிடிக்குமா எரிபொருள் விலை? ஆர்.எஸ்.பாரதி Vs தமிழிசை

'விறகு அடுப்பில் சமைக்க வைத்தது தான் மோடியின் சாதனை'

ஆர்.எஸ்.பாரதி, அமைப்புச் செயலர், தி.மு.க.,:

பிரதமர் மோடி செல்லாத நாடே இல்லை என்ற அளவுக்கு, கடந்த 12 ஆண்டுகளாக வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். அதனால், இந்திய மக்களுக்கு எந்தப் பலனும் இல்லை என்பது இப்போது நிரூபணமாகி விட்டது. ஈரான் - அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் துவங்கிய ஏழாவது நாளில், சமையல் காஸ் விலை சிலிண்டருக்கு, 60 ரூபாய் உயர்ந்தது. ஒன்பதாவது நாளில், வணிக சமையல் காஸ் சிலிண்டர் நிறுத்தப்பட்டது. இப்போது, பிரீமியம் பெட்ரோல், தொழில் துறை எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. மோடி அரசின் வெளியுறவுக் கொள்கை தோல்வி அடைந்து விட்டது.

வணிக சிலிண்டர் வினியோகம் நிறுத்தப்பட்டதால், சிறிய, நடுத்தர ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. மற்ற தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இது மக்கள் மீதான மோடி அரசின் பொருளாதார தாக்குதல். இன்று சமையல் காஸ், இருசக்கர வாகனம் இல்லாத வீடே இல்லை. எரிபொருள் விலை உயர்வு, தட்டுப்பாட்டால் ஒவ்வொரு குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளது.

பெரு நகரங்களில் உள்ளவர்களைக் கூட, விறகு அடுப்பில் சமைக்க வைத்ததுதான் மோடி அரசின் சாதனை. ரஷ்யா -- உக்ரைன் போர் துவங்கியபோதே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால், இன்றைய நெருக்கடியை தவிர்த்திருக்கலாம்.
எரிபொருள் விலை உயர்வும் தட்டுப்பாடும் சட்டசபை தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்.



'நெருக்கடியை எதிர்கொள்வதில் பிரதமர் மோடி வல்லவர்'



தமிழிசை, முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,
மேற்காசிய போரால் வரலாறு காணாத அளவில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால், உலகின் பெரும்பான்மையான நாடுகளில், சமையல் காஸ், பெட்ரோல், டீசல் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. ஆனால், இந்தியாவில் சமையல் காஸ் விலை சிறிதளவு உயர்ந்துள்ளது.
இந்தியாவில், 30 கோடி குடும்பங்களுக்கு சமையல் காஸ் வழங்கப்படுகிறது. அதில், 20 கோடி காஸ் இணைப்புகள், மோடி ஆட்சியில் கொடுக்கப்பட்டவை. வீடுகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு பிரச்னை வந்து விடக் கூடாது என்பதற்காகவே, வணிக காஸ் சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாட்டில் போர் சூழல் இருந்தால், அதன் தாக்கம் அனைத்து நாடுகளிலும் இருக்கும் என்பது சாமானிய மக்களுக்கும் தெரியும். இப்போது, மோடி அரசின் சிறப்பான வெளியுறவுக் கொள்கை, ராஜதந்திர நடவடிக்கைகளால், இந்திய கச்சா எண்ணெய் கப்பல்கள், ஹார்முஸ் நீரிணையை கடந்து வந்து கொண்டிருக்கின்றன.

மேற்காசிய போர் பாதிப்பிலிருந்து, மக்கள் பாதுகாக்கப்பட்டு உள்ளனர். எனவே, எரிபொருள் பிரச்னை, சட்டசபை தேர்தலில் கண்டிப்பாக எதிரொலிக்காது.

Advertisement