வேட்பாளர் பிரசாரத்திற்கு வாகனங்கள்... தயாராகிறது:விழுப்புரத்தில் ஒர்க் ஷாப்புகள் 'பிசி'
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், வேட்பாளர்கள் ஓட்டு கேட்டு வலம் வர பிரசார வாகனங்கள் தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில், நான்கு தொகுதிகள் தி.மு.க., வசமும், 2 தொகுதிகள் அ.தி.மு.க., வசமும், ஒரு தொகுதி பா.ம.க., வசமும் உள்ளது. இதில், விழுப்புரம், மயிலம், திண்டிவனம், வானுார், திருக்கோவிலுார் ஆகிய 5 தொகுதிகளில் அ.தி.மு.க.,வும், விக்கிரவாண்டி, செஞ்சி தொகுதிகளில் பா.ம.க.,வும் போட்டியிட தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க., கூட்டணியில் கடந்த தேர்தலில் திருக்கோவிலுார் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.,விற்கு, தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் தொகுதி ஒதுக்கப்படவில்லை.
தி.மு.க., கூட்டணியில், விழுப்புரம், விக்கிரவாண்டி, மயிலம், செஞ்சி, திருக்கோவிலுார் ஆகிய தொகுதிகளில் ஆளுங்கட்சி போட்டியிடவும், வானுார் அல்லது திண்டிவனம் ஏதேனும் ஒரு தொகுதி, வி.சி., கட்சி வேட்பாளர் போட்டியிடவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
கடந்த தேர்தலில் வானுார் தொகுதியில் போட்டியிட்ட வி.சி., கட்சிக்கு, இந்த தேர்தலில் திண்டிவனம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் புதிதாக இணைந்துள்ள தே.மு.தி.க.,விற்கு விழுப்புரம் மாவட்டத்தில், ஒரு 'சீட்' ஒதுக்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களாக, செஞ்சி தொகுதியில் கிருஷ்ணன், மயிலம் தொகுதியில் விஜய் விக்ரம், திண்டிவனத்தில் பேச்சிமுத்து, வானுாரில் கரிகாலன், விழுப்புரத்தில் அபிநயா பொன்னிவளவன், விக்கிரவாண்டியில் சுபா சந்திரசேகரன், திருக்கோவிலுாரில் ஹேமராஜன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அ.தி.மு.க., கூட்டணியில் செஞ்சி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகள் பா.ம.க.,விற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மயிலம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகம், செஞ்சி தொகுதி பா.ம.க., வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ., கணேஷ்குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தயாராகும் பிரசார வாகனங்கள் அடுத்த கட்டமாக அனைத்து கட்சியினரும் வேட்பாளர்களை அறிவித்ததும் வாக்காளர்களை சந்தித்து ஓட்டு கேட்க துவங்கி விடுவர். இதற்காக மாவட்டத்தில் உள்ள பிரதான ஒர்க் ஷாப்புகளில் மினி சரக்கு வேன்களை பிரசாரத்திற்கு ஏற்றவாறு மாற்றி கட்டமைக்கும் பணிகளை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் உள்ள வாகன ஒர்க் ஷாப்புகள் பிசியாகியுள்ளன. வேட்பாளர் வசதியாக வேனில் நின்றபடி பிரசாரம் செய்வதற்கு ஏற்ற வகையில், மின்விளக்கு வசதியுடன் வடிவமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும், சில தினங்களில் பிரத்யேக வசதியுடன் புதிய வேனில், தேர்தல் பிரசாரத்தை துவக்கிட கட்சிகள் தயாராகி வருகின்றன.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்