Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


இழுபறியான போட்டி.. ஊசலாடும் தேர்தல் முடிவுகள்!

இழுபறியான போட்டி.. ஊசலாடும் தேர்தல் முடிவுகள்!

'தினமலர்' நாளிதழும், சாணக்யா டிஜிட்டல் ஊடகமும் இணைந்து நடப்பாண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் இரண்டு கட்ட கருத்துக்கணிப்பை நடத்தின. மார்ச் 23 முதல் 30ம் தேதி வரை முதல் கருத்துக்கணிப்பு 19,305 பேரிடமும்; ஏப்ரல் 14 முதல் 18 வரை இரண்டாம் கட்ட கருத்துக்கணிப்பு 25,691 பேரிடமும் நடத்தப்பட்டன.
தொலைபேசி, இணையம் வாயிலாக அல்லாமல் , நேரடியாக எமது நிருபர்கள் வாயிலாகவே வாக்காளர்களிடம் இருந்து கருத்துகள் பெறப்பட்டன. தமிழகம் எங்கும் உள்ள பல்வேறு வயதினர், பாலினர், மதம், ஜாதி, பிரிவினர் என்று பரவலாக அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியே இந்த கருத்துகள் பெறப்பட்டுள்ளன. அதேபோல், கிராமம், சிறு நகரம், நகரம் என்று பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்களுடைய எண்ணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த அடையாளங்களுடையவர்களை தேடிப்போய் நடத்தப்படவில்லை. தற்போக்காகவே நடத்தப்பட்டது.
முதல் கருத்துக் கணிப்பின் முடிவு, கடந்த 6ம் தேதி, இதே தேர்தல் களம் பகுதியில் பிரசுரமாயிற்று. இன்று, இரண்டாம் கட்ட கணிப்புகளை அடுத்தடுத்த பக்கங்களில் நீங்கள் வாசிக்கலாம். இரண்டையும் ஆய்வு செய்யும்போது, அ.தி.மு.க.,- மற்றும் தி.மு.க., கூட்டணிகளுக்கு இடையே போட்டி மிகவும் நெருக்கமாக இருப்பதாக தெரிகிறது. இதனால், ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி -- தோல்வி நுாலிழையில் இருக்கக்கூடும். அதோடு, இரண்டு கூட்டணிகளும் கிட்டத்தட் ட ஒரே அளவில் சீட்களை வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
மேலும் வாசிப்பதற்கு முன் நீங்கள் மனதில் கொள்ள வேண்டியவை:
* இதில் சாய்வுகள் இல்லையா என்ற கேள்வி எழலாம். நிறுவனத்திற்கு சாய்வு இல்லை என்றாலும், ஏராளமான நபர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டனர், அவர்களில் ஒவ்வொருவருக்கும் எந்த சாய்வும் இருக்காது என்று யாராலும் உத்தரவாதமாக சொல்ல முடியாது. அப்படி சாய்வு இருந்திருந்தால், கருத்து கேட்க அவர்கள் அணுகிய நபர்களின் தேர்வை அது பாதித்து இருக்கலாம். இதை தவிர்க்கவே, 'நீங்கள் யாருக்கு ஓட்டுப்போடுவீர்கள்' என்பதை மட்டும் கேட்டுவிட்டு முடித்துக் கொள்வதில்லை
* வழிநடத்தும் கேள்விகள் முன்முடிவுகளோடு இருப்பதாக கருதப்படலாம்
* ஒரே மனநிலை கொண்ட பலர் இந்த கருத்துக் கணிப்புகளில் அதிகம் பங்கேற்று இருக்க வாய்ப்பு உள்ளது
* இளைய தலைமுறையினர் அதிகம் கருத்து தெரிவித்து இருப்பதால், 'உற்சாக பிழை'யும் இதில் காணக் கிடைக்கலாம்.
எத்தனை கவனத்தோடு செய்தாலும், இத்தகைய சாய்வுகளை தவிர்க்க முடியாது என்பது தான் தேர்தல் ஆய்வின் சுவாரசியமே. ஆனால், இந்த கணிப்புகளைஆய்வு செய்யும் போது, இத்தகைய சாய்வுகளை கவனத்தில் கொண்டு, அவற்றை விலக்கிவிட்டு, பின்வரும் முடிவுகளுக்கு வந்திருக்கிறோம்.

* கடந்த 2024 லோகசபா தேர்தலில், தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளித்ததாக கூறுபவர்களின் விகிதம், 2021ல் அந்த கூட்டணி பெற்ற விகிதத்தை விட இரண்டு சதவீத புள்ளி குறைவாகவும், 2024ல் அது பெற்ற ஓட்டுக்களைவிட ஆறு சதவீத புள்ளிகள் குறைவாகவும் இருக்கிறது.
* கடந்த 2024 லோகசபா தேர்தலில், அ.தி.மு.க.,வின் தற்போதைய கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஓட்டளித்ததாக கூறுபவர்களின் விகிதம் 2021ல் அவை பெற்ற ஓட்டுக்களுக்கு நான்கு சதவீத புள்ளிகள் குறைவாகவும், 2024ல் அவை பெற்ற ஓட்டுக்களைவிட மூன்று சதவீத புள்ளிகள் குறைவாகவும் இருக்கிறது.
* நாம் தமிழருக்கு வாக்களித்ததாக கூறுபவர்களின் எண்ணிக்கை, அந்த கட்சி பெற்ற வாக்குகளுக்கு சற்றே குறைவாக இருக்கிறது.
* தமிழகத்தில் முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 14.60 லட்சம். மொத்த வாக்காளர்களில் 2.50 சதவீதம். நமது கருத்துக்கணிப்பில் அவர்களது எண்ணிக்கை இயல்பைவிட அதிகமாக உள்ளது. அதனால், த.வெ.க.,விற்கான ஆதரவு சற்று அதிகமாக தெரியலாம்

முடிவாக கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?

1. ஆட்சிக்கு எதிரான ஓட்டு 12--14 சதவீதம் வரை உள்ளது.

2. 2021 தேர்தலை ஒப்பிடுகையில், தி.மு.க., கூட்டணி 12--14 சதவீத புள்ளி ஓட்டுகளை இழக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இந்த ஓட்டுகள் அனைத்தும் அ.தி.மு.க., கூட்டணிக்கு செல்லவில்லை.

3. அ.தி.மு.க., தனது தற்போதைய கூட்டணி கட்சிகளோடு 2021ல் பெற்ற ஓட்டுகளைவிட ஆறு சதவீத புள்ளி ஓட்டுகளை இழக்க வாய்ப்பு.

4. முதல் முறை வாக்காளர்கள், அதிகளவில், இந்த கருத்துக்கணிப்பில் பங்கெடுத்துக்கொண்டதால், விஜயின் 23 சதவீதம் சற்று அதிகமாக இருக்கலாம்.

5. இரு பெரிய கட்சிகளுக்கும் நான்கு சதவீத புள்ளி வித்தியாசம் இருந்தாலும், நேரடியாக அ.தி.மு.க., வெற்றி பெறுகிறது என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு தொகுதியிலும் விஜய் எவ்வளவு ஓட்டுக்களை பிரிக்கிறார் என்பதை பொறுத்து தான் அ.தி.மு.க.,வின் வெற்றி உறுதியாகும். ஒரு வேளை, குறிப்பிட்ட தொகுதிகளில், விஜய் தங்கள் ஓட்டை பிரிப்பதை தி.மு.க., கணிசமாக தடுத்துவிட்டால், அ.தி.மு.க.,வால் அந்த தொகுதியில் வெல்ல முடியாது.

நான்கு சதவீதம்

நேருக்கு நேர் நடக்கும் தேர்தலில் நான்கு வதவீத புள்ளி ஓட்டு வித்தியாசம் என்பது மிகப் பெரியது. அது வெற்றி பெறும் சீட்டுகளின் விகிதத்தில் குறைந்தபட்சம் 15 முதல் 20 சதவீத சீட்டுகளை கூடுதலாகக் கொண்டு வந்து சேர்க்கும்.

ஆனால், இந்த தேர்தலில் மிகப் பெரிய 'ட்விஸ்ட்' நடிகர் விஜயின் த.வெ.க பெறும் 23 சதவீத ஓட்டுக்கள் தான்.

பொதுவாக இரு திராவிடக் கட்சிகளும் மோதும் போது ஒரு தொகுதியில் வெற்றி பெற 40 முதல் 45 சதவீத ஓட்டுக்கள் தேவைப்படும்.

ஆனால், த.வெ.க 23 சதவீத ஓட்டுக்களையும், நா.த.க., 7 சதவீத ஓட்டுக்களையும், ஆக மொத்தம் 30 சதவீத ஓட்டுக்களைப் பிரிக்கும்போது, வெற்றி பெறுவதற்கான இலக்கு வெறும் 35 முதல் 36 சதவீதமாக குறைந்துவிடுகிறது.

எட்டவேண்டிய இலக்கு இவ்வளவு குறைவாக இருக்கும்போது, அ.தி.மு.க.வின் 36 சதவீதம் என்பது பல தொகுதிகளில் அவர்களை மிக எளிதாக வெற்றி பெற வைத்துவிடும். தி.மு.க.,வின் 32 சதவீதம் என்பது பல இடங்களில் 2 அல்லது 3 சதவீத வித்தியாசத்தில் நூலிழையில் வெற்றியை நழுவவிடும் நிலையை உருவாக்கும்.

ஆனால், இந்த நான்கு சதவீத இடைவெளியை வைத்து அ.தி.மு.க., தான் உறுதியாக வெற்றி பெறும் எனச் சொல்ல முடியாது. ஏனெனில், தேர்தல் கருத்துக் கணிப்பில் உள்ள யதார்த்தச் சிக்கல்களும் இங்கே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

எந்தவொரு கருத்துக்கணிப்பிலும் குறைந்தபட்சம் பிளஸ் அல்லது மைனஸ் 3 சதவீத புள்ளி பிழை வரம்பு இருக்கும். அந்த நான்கு சதவீத இடைவெளி பிழை வரம்புக்குள் சிக்கினால், களத்தில் இரண்டு கட்சிகளும் 34 - 34 சதவீதம் எனச் சரிசமமான நிலையில் நிற்கின்றன என்று அர்த்தம்.

மேலும், சர்வே காட்டும் நான்கு சதவீத புள்ளி இடைவெளி என்பது மாநிலம் முழுவதற்குமான 'சராசரி'. ஆனால் ஓட்டுக்கள் அப்படி ஒரே சீராகப் பரவி இருக்காது. கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க., முன்னிலையில் இருக்கலாம்; டெல்டா மற்றும் சென்னையில் தி.மு.க., முன்னிலை வகிக்கலாம்.

ஓட்டுக்கள் செறிவாக உள்ள இடங்களில் சீட்டுகளை அள்ளுவதும், மற்ற இடங்களில் நூலிழையில் தோற்பதும் நடக்கும்.

35 சதவீத ஓட்டுக்களை மட்டுமே குறிவைத்து நடக்கும் இந்த போட்டிகளில், கட்சியின் செல்வாக்கை விட வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்கும், சாதிப் பலமும், பண பலமுமே கடைசி நேர வெற்றியைத் தீர்மானிக்கும்.

இன்றளவில், இரு கட்சிகளும் சரிசமமாக இருக்கின்றன என்றே சொல்ல வேண்டும்.

Advertisement