/ செய்திகள் /  உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் பா.ஜ. வேட்பாளர் தங்கராஜ் சபதம்

 உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் பா.ஜ. வேட்பாளர் தங்கராஜ் சபதம்

திருப்பூர்: ''திருப்பூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து, உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்'' என்று வாக்காளர்களிடம் உறுதியளித்து, பா.ஜ. வேட்பாளர் காடேஸ்வரா தங்கராஜ் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். திருப்பூர் தெற்கு பா.ஜ. வேட்பாளர் காடேஸ்வரா தங்கராஜ் கூட்டணி கட்சியினருடன் சென்று மாநகரில் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். அதன் ஒரு பகுதியாக நேற்று காலை திருப்பூர் புஷ்பா சந்திப்பில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் வேட்பாளர் காடேஸ்வரா தங்கராஜ் வழிபட்டார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின், காலேஜ் ரோட்டில் உள்ள கடைகள், வீடுகள்தோறும் சென்று தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். திரு.வி.க. நகர் காலனி குடியிருப்பு நல சங்கத்தில் மக்களை சந்தித்து ''தாமரைக்கு ஓட்டளித்து அதிக வித்தியாசத்தில் வெற்றியை தர வேண்டும்'' என, பிரசாரம் செய்தார். காலேஜ் ரோடு ஹவுசிங் யூனிட்டில் மக்களிடம் ஓட்டு சேகரித்த பின், மைதானத்தில் விளையாடி கொண்டிருந்த வாலிபர்களுடன் இணைந்து இறகுப்பந்து விளையாடிய படி ஓட்டு சேகரித்தார். இந்திரா நகர், முத்துச்சாமி வீதி உள்ளிட்ட பகுதியில் பா.ஜ. இளைஞர் அணி மாநில தலைவர் சூர்யா, வேட்பாளருக்கு ஓட்டுகளை செலுத்தி மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதுதவிர, வேட்பாளருக்கு ஆதரவாக மண்டலம் வாரியாக தெற்கு தொகுதி பகுதியில் வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரித்தனர். முதியவர், பெண்களிடம் மத்திய அரசின் திட்டங்கள், அதன் வாயிலாக ஏற்படும் பயன்கள் குறித்து வேட்பாளர் எடுத்துரைத்தார். ''தொகுதியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மீது கவனம் செலுத்தி, பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்தப்படும். தொழிலாளர் நகரத்தில், அவர்களுக்கான குடியிருப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும். மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தெளிவான விழிப்புணர்வு ஏற்படுத்தி, மக்கள் பயன்பெற வழிவகை செய்யப்படும்'' என்று வேட்பாளர் காடேஸ்வரா தங்கராஜ் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !