/ செய்திகள் /  இடைத்தேர்தலில் பா.ஜ., 5 காங்., 2 இடங்களில் வெற்றி

 இடைத்தேர்தலில் பா.ஜ., 5 காங்., 2 இடங்களில் வெற்றி

புதுடில்லி: நாடு முழுதும் ஐந்து மாநிலங்களில், ஏழு தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், பா.ஜ., ஐந்து இடங்களிலும், காங்., இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, மஹாராஷ்டிராவில் நடந்த இடைத்தேர்தலில் அஜித் பவார் மனைவி அமோக வெற்றி பெற்றார். குஜராத், கர்நாடகா, மஹாராஷ்டிரா, வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து மற்றும் திரிபுராவில் நடந்த இடைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், குஜராத்தின் உம்ரேத் தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் ஹர்ஷத்பாய் கோவிந்த்பாய் பர்மார் 85,500 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். மஹாராஷ்டிராவின் ரகுரி தொகுதியை பா.ஜ., வின் அக்ஷய் சிவாஜிராவும், பாராமதி தொகுதியை பா.ஜ., கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரசின் சுனேத்ரா பவாரும் கைப்பற்றினர். மறைந்த தேசியவாத காங்., தலைவர் அஜித் பவாரின் மனைவியான இவர், 2,18,034 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதே போல் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தின் கொரிடாங் தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் டாவோசியர் ஐ இம்சென், 3,123 ஓட்டுகள் வித்தியாசத்திலும், திரிபுராவின் தர்மநகர் தொகுதியில் பா.ஜ.,வின் ஜஹர் சக்கரவர்த்தி, 18,290 ஓட்டுகள் வித்தியாசத்திலும் வெற்றி வாகை சூடினர். கர்நாடகாவின் தவணகெரே தெற்கு மற்றும் பாகல்கோட் தொகுதியை காங்., கைப்பற்றியது. அந்த இரு தொகுதியிலும் முறையே காங்., வேட்பாளர்கள் சமர்த் ஷமானுார் மல்லிகார்ஜுனா 5,708 ஓட்டுகள் வித்தியாசத்திலும், உமேஷ் ஹல்லப்பா மெட்டி, 22,332 ஓட்டுகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !