Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


திருப்பூரில் 4 தொகுதிகளை கைப்பற்றிய த.வெ.க.,

திருப்பூரில் 4 தொகுதிகளை கைப்பற்றிய த.வெ.க.,

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், த.வெ.க. 4 தொகுதிகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தலா 2 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.

தமிழக அரசியல் வரலாற்றில் திருப்பூர் மாவட்டம் எப்போதும் ஒரு திசைகாட்டியாகவே இருந்து வந்துள்ளது. இந்த 2026 தேர்தல் முடிவுகள் காட்டியுள்ள அதிரடி மாற்றங்கள், திருப்பூரிலும் பிரதிபலித்துள்ளது. 2011 முதல் 2021 வரை அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய இரு துருவங்களைச் சுற்றியே சுழன்ற திருப்பூரின் அரசியல், இப்போது த.வெ.க. வருகையால் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தின் பல தொகுதிகள் அ.தி.மு.க.வின் அசைக்க முடியாத எக்கு கோட்டைகளாகக் கருதப்பட்டன. ஆனால், அந்த பிம்பத்தைத் த.வெ.க. இந்தத் தேர்தலில் சுக்குநுாறாக உடைத்துள்ளது.

பல்லடம் தொகுதியில், 3.29 லட்சம் வாக்காளர்கள் இருந்த நிலையில், எந்தவித ஆரவாரமான களப்பணியும் இன்றி த.வெ.க.வின் ராம்குமார் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. வேட்பாளர்களைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

அவிநாசியில் பா.ஜ. வேட்பாளரான மத்திய அமைச்சர் முருகன், தி.மு.க. வேட்பாளர் கோகிலாமணி ஆகியோரின் போட்டியைச் சமாளித்து இந்த வெற்றி த.வெ.க வேட்பாளர் கமலியின் வசமாகியுள்ளது.

திருப்பூர் வடக்கு தொகுதியை, ஒரு புதிய அரசியல் சக்தியாகக் களம் கண்ட த.வெ.க. மிக எளிதாகக் கைப்பற்றித் தனது பலத்தை நிரூபித்துள்ளது. தொழிலாளர்கள் நிறைந்த இப்பகுதியில் த.வெ.க.வின் வெற்றி, இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றத்தைக் காட்டுகிறது. இங்கு செங்கோட்டையன் ஆதரவாளரான முன்னாள் எம்.பி. சத்தியபாமா வெற்றி கண்டார்.
தி.மு.க.வின் பிடியில் இருந்த தெற்கு தொகுதியையும் இந்த முறை த.வெ.க. தன்வசப்படுத்தி, மாநகரப் பகுதியில் ஒரு முழுமையான அதிகார மாற்றத்தை நிகழ்த்தியுள்ளது. தெற்கு தொகுதி த.வெ.க. வேட்பாளர் பாலமுருகன், தி.மு.க. வேட்பாளரான மாஜி மேயர் தினேஷ்குமாரை வென்று சாதனை படைத்திருக்கிறார்.

Advertisement