விசிலை விமர்சியுங்கள்
சிப்பி மாவட்டத்தில், விசில் கட்சியில் வெகு காலமாக உழைத்துக் கொண்டிருந்த பெண்மணியை கட்சியினர் மதிக்கவில்லையாம். இதனால், தலைநகருக்கு வந்து, தலைவர் காரை மறித்து நியாயம் கேட்டார். ஆனாலும், தலைமையிடம் இருந்து சரியான பதில் இல்லை. கூடவே, தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் கொடுக்கப்படவில்லை. விரக்தியில் இருந்தவரை, சூரிய கட்சி பக்கம் கொண்டு சென்றுள்ளனர். விசில் தலைவரை, விளாசித் தள்ளி தீவிர பிரசாரத்தில் ஈடுபட வைத்துள்ளனராம். கள நிலவர கதறல் சூரிய கட்சித் தலைமையின் வியூக டீம் இரு நாட்களுக்கு முன் எடுத்த சர்வேயில், கட்சிக்கு சாதகமான ரிசல்ட் கிடைக்கவில்லையாம். ஆனாலும், கள நிலவரம் என்னவோ, அதை அச்சு பிசகாமல் தலைமைக்கு சொல்லி விட்டனராம். இதனால், கடும் பதற்றத்துக்குள்ளான தலைமை, 'தேர்தலுக்கு குறுகிய நாட்களே உள்ளன. என்ன செய்தால் நிலைமை சரியாகும் என கண்டறிந்து, அதை உடனே செய்யுங்கள்' என, கட்சியின் அனைத்து மட்ட நிர்வாகிகளுக்கும் உத்தரவுகளை அனுப்புகிறதாம்.