/ செய்திகள் / விஜய் விளக்கத்தில் கவர்னருக்கு திருப்தியில்லை; ஆட்சி அமைப்பதில் தொடரும் சிக்கல்

விஜய் விளக்கத்தில் கவர்னருக்கு திருப்தியில்லை; ஆட்சி அமைப்பதில் தொடரும் சிக்கல்

சென்னை: பெரும்பான்மையை எப்படி நிரூபிப்பீர்கள் என்ற கேள்விக்கு விஜய் அளித்த விளக்கத்தில் கவர்னருக்கு திருப்தியில்லை. இதனால், தவெக ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.கவர்னர் அர்லேக்கரை சந்தித்து, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், ஆட்சி அமைக்க அழைக்குமாறு கடிதம் கொடுத்து இருந்தார். போதுமான எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவை பெற்று வருமாறு கவர்னர் அறிவுறுத்தியதை அடுத்து, தமிழக அரசியல் களம் சூடு பிடித்தது.இந்நிலையில் விஜய்க்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. பதவியேற்பு விழா ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டது. அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரி ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இந்த சூழலில், ஆட்சி அமைப்பது தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்க கவர்னர் அழைப்பு விடுத்து இருந்தார். அழைப்பின் பேரில், இன்று காலை 11 மணிக்கு கவர்னர் மாளிகைக்கு தவெக தலைவர் விஜய் வந்தார். விஜய் இடம் கவர்னர் ஆட்சி அமைப்பது தொடர்பாக சில விளக்கங்களை கேட்டு உள்ளார்.

கவர்னர் திட்டவட்டம்

''113 எம்எல்ஏக்களை வைத்து எப்படி ஆட்சி அமைப்பீர்கள்? வேறு எந்த கட்சி தவெக அரசை ஆதரிக்கும்? பதவி ஏற்ற பிறகு பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்று எப்படி நம்புகிறீர்கள்? உங்களிடம் இருக்கும் எம்எல்ஏக்களை வைத்து நிலையான அரசை அமைக்க முடியுமா? 118 எம்எல்ஏக்கள் ஆதரவை இருப்பதை காட்டுங்கள், அவ்வாறு நிரூபித்தால் மட்டுமே பதவி பிரமாணம் செய்து வைக்க முடியும். பெரும்பான்மை கிடைத்துவிடும் எனும் யூகத்தின் அடிப்படையில் செயல்பட முடியுமா?' என்று விஜயிடம் தமிழக கவர்னர் அர்லேக்கர் கேள்விகளை எழுப்பினார். அப்போது அவரிடம், விதிமுறைகளின்படி தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று விஜய் மீண்டும் வலியுறுத்தினார். விஜய் கவர்னரை சந்திப்பது, 24 மணி நேரத்தில் இது இரண்டாம் முறை.பெரும்பான்மையை எப்படி நிரூபிப்பீர்கள் என்ற கவர்னரின் கேள்விகளுக்கு விஜய் நேரடியாக பதில் அளிக்க முடியவில்லை. அவர் அளித்த விளக்கத்தில் கவர்னருக்கு திருப்தி இல்லை. இதனால், ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பது, பதவிப்பிரமாணம் செய்து வைப்பது பற்றி கவர்னர் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதனால் தவெக ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.முன்னதாக, கவர்னர் மாளிகைக்கு விஜய் மற்றும் கட்சியினர் சென்றபோது, அவரது காருக்கு மட்டுமே உள்ளே செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அவருடன் சென்ற கட்சியினர் கார்களை போலீசார் அனுமதிக்க மறுத்து விட்டனர்.

இபிஎஸ்க்கும் அழைப்பு

கவர்னர் அர்லேக்கர் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்சுக்கும் நேரில் சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்து இருக்கிறார். அதன்படி கவர்னரை சந்தித்து இபிஎஸ் பேச உள்ளார். அடுத்தபடியாக, காபந்து முதல்வர் ஸ்டாலினுக்கும் கவர்னர் அழைப்பு விடுத்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு வாபஸ்

ஆட்சியமைக்க முடியாமல் தவெக பரிதவித்து வரும் நிலையில், அவரது வீட்டுக்கு வழங்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பை போலீசார் திரும்பப் பெற்றுள்ளனர். மேலும், பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருந்த மெட்டல் டிடெக்டர் மற்றும் தடுப்புகள் அகற்றப்பட்டன. மேலும், தொண்டர்கள் குவிந்து திருவிழாக் கோலம் பூண்டிருந்த விஜய்யின் இல்லம், தற்போது களையிழந்து காணப்படுகிறது.தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!தமிழக கவர்னர் அர்லேக்கரை விஜய் சந்தித்து பேச்சு; தினமலர் யுடியூப் உள்ளிட்ட இணையதளத்தில் நேரலை ஒளிபரப்பு வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !