/ செய்திகள் /  மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் ஈ.வெ.ராமசாமி பட சர்ச்சை

 மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் ஈ.வெ.ராமசாமி பட சர்ச்சை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரையில் இன்று பிரதமர் மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசார பொதுக் கூட்ட நுழைவாயில் ஒன்றில், ஈ.வெ.ரா., படம் வைக்கப்பட்டிருந்தது சர்ச்சையானது. இதனால், அந்தப் படம் உடனடியாக அகற்றப்பட்டது. வரும் சட்டசபை தேர்தலையொட்டி, தே.ஜ., கூட்டணி சார்பில் மதுரை மண்டேலா நகரில், இன்று மாலை பிரசார பொதுக் கூட்டம் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி உட்பட, கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.இந்நிகழ்ச்சிக்காக மேடை அமைக்கும் பணிகளில், கடந்த ஒரு வாரமாக பா.ஜ.,வினர் ஈடுபட்டுள்ளனர். பொதுக் கூட்டத்தில் கட்சியினர் எளிதாக வந்து செல்ல வசதியாக, நான்கு பிரமாண்ட நுழைவாயில்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில், முதல் நுழைவாயிலில் ஈ.வெ.ரா.,வில் துவங்கி அடுத்தடுத்து மூன்று நுழைவாயிலில் மறைந்த முதல்வர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் வைக்கப்பட்டன. மேடையில் கூட்டணி கட்சித் தலைவர்கள் படங்களும், நுழைவாயிலையொட்டி உள்ள சுற்றுப்பகுதியில் கூட்டணி கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்களின் படங்களும் வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, தமிழக அரசியல் தலைவர்களின் படங்களுடன், ஹிந்து மத கோட்பாடுகள், நம்பிக்கை, சம்பிரதாயங்களுக்கு எதிராக கருத்து பரப்பிய திராவிட கழக நிறுவனர் ஈ.வெ.ரா.,வின் படமும் வைக்கப்பட்டிருந்தது. இது சர்ச்சையாக வெடித்தது. இது குறித்த செய்திகள் பொதுவெளியில் வெளியானத்தை தொடர்ந்து, ஈ.வெ.ரா.,வின் படம் அகற்றப்பட்டது. இது குறித்து பொதுக்கூட்ட ஏற்பாட்டாளர்களிடம் கேட்டபோது, 'திராவிட இயக்க தலைவர்களில் ஒருவர் என்பதால், ஈ.வெ.ரா., படமும் வைக்கப்பட்டது. பொதுவெளியில் விமர்சனம் கிளம்பியதால், படம் அகற்றப்பட்டது. அந்த இடத்தில் பா.ஜ.,வின் சின்னமான தாமரை படம் வைக்கப்பட்டு விட்டது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !