/ செய்திகள் /  தாலிக்கு தங்கம் திட்டம் கொண்டு வரப்படும்! அ.தி.மு.க., வேட்பாளர் தாமோதரன் பிரசாரம்

 தாலிக்கு தங்கம் திட்டம் கொண்டு வரப்படும்! அ.தி.மு.க., வேட்பாளர் தாமோதரன் பிரசாரம்

கோவை: ''அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மீண்டும் தாலிக்கு தங்கம் திட்டம் கொண்டுவரப்படும்,'' என, கிணத்துக்கடவு தொகுதி வேட்பாளர் தாமோதரன் தெரிவித்தார். கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட, மாவுதம்பதி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் முன்னாள் வேளாண் துறை அமைச்சர் அ.தி.மு.க., வேட்பாளர் தாமோதரன், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: தி.மு.க., ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன. சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. இதை சரி செய்ய மக்கள் அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்க வேண்டும். முதல்வர் பழனிசாமி தலைமையில், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும். விலைவாசி உயர்வு, வரி உயர்வால் பாதித்துள்ள அனைத்து குடும்பங்களுக்கும், 10 ஆயிரம் ரூபாய் வீதம் நிவாரண தொகை வழங்கப்படும். மேலும், அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை, 2,000 ரூபாய் வழங்கப்படும். இது மட்டுமின்றி, சட்டம் ஒழுங்கு சரி செய்யப்படும். பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும். புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். மேலும், கிணத்துக்கடவு தொகுதியில் உள்ள கிராமங்களில் கண்காணிப்பு கேமராக்கள், சாலை வசதிகள், நிழற்கூரைகள், சோலார் விளக்குகள் உள்ளிட்ட மக்களுக்கு தேவையான வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, பேசினார். பிரசாரத்தில், மதுக்கரை ஒன்றிய செயலாளர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ., மற்றும் அ.ம.மு.க., கழக அமைப்பு செயலாளர் ரோகிணி, மாவட்ட விவசாய அணி செயலாளர் மகாலிங்கம், மதுக்கரை நகர் கழக செயலாளர் சண்முகராஜா, பா.ஜ., கோவை தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் வசந்தராஜன், கோவை தெற்கு மாவட்ட தலைவர் சந்திரசேகர், பா.ஜ., மாநில மகளிர் அணி செயலாளர் அருணா தேவி, பா.ஜ., ஒன்றிய தலைவர் சிவசுப்ரமணியம், பா.ஜ., நிர்வாகி மகேஷ் கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !