துடியலுாரில் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு அ.தி.மு.க., வேட்பாளர் அருண்குமார் உறுதி
பெ.நா.பாளையம்: ''துடியலுார் வட்டாரத்தில் நிலவும் போக்குவரத்து நெருக்கடி பிரச்னைக்கு உரிய தீர்வு காணப்படும்,'' என, கவுண்டம்பாளையம் அ.தி.மு.க., வேட்பாளர் அருண்குமார் உறுதி அளித்தார்.
கவுண்டம்பாளையம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளராக தற்போதைய எம்.எல்.ஏ., அருண்குமார் மீண்டும் களம் காண்கிறார்.
துடியலூர் ஸ்ரீ வத்ஸா கார்டன் குடியிருப்பு பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் கூறியதாவது:
துடியலூர் மாநகராட்சியை ஒட்டி உள்ள ஊராட்சி பகுதிகளில் தினசரி தேங்கும் குப்பைகளை மேலாண்மை செய்ய, அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இயற்கையான, பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில், அதிநவீன திடக்கழிவு மேலாண்மை மையம் உருவாக்கப்படும். இதனால் தூய்மையான, சுகாதாரமான நிலையை உருவாக்க முடியும். துடியலூர் வட்டாரத்தில் உள்ள சிறு, குறு தொழிற்சாலைகள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர்கள் காலை, மாலை போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண சாலைகளை அகலப்படுத்தி, காலை, மாலை நேரங்களில் அதிகப்படியான அரசு பஸ்களை இயக்கி, நெருக்கடி இல்லாத போக்குவரத்து உருவாக்கப்படும்.
துடியலூர் சந்திப்பில் இருந்து சரவணம்பட்டி, மேட்டுப்பாளையம், கோவை, கணுவாய் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல சீரான போக்குவரத்து வசதி உருவாக்கப்படும். அ.தி.மு.க., அரசு பதவி ஏற்ற உடன் மாணவர்கள், வங்கிகளில் பெற்ற கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.
இவ்வாறு, அவர் பிரசாரம் செய்தார்.
துடியலூர் பகுதி கழக செயலாளர் வனிதாமணி, பிரகாஷ், கவிச்சந்திரன், சாந்தி பூஷன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்