/ செய்திகள் /  நல்ல முதல்வர் இருந்தால் எம்.எல்.ஏ., தவறு செய்ய முடியாது

 நல்ல முதல்வர் இருந்தால் எம்.எல்.ஏ., தவறு செய்ய முடியாது

கோவை: சாணக்யா சேனல் சார்பில், சில் பட்டிமன்றம், கோவை, ராம்நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் ஹாலில் நேற்று நடந்தது. தேர்தலையொட்டி, 'இளைஞர்களை அரசியலை நோக்கி ஈர்ப்பது கொள்கையா, கவர்ச்சியா' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. இதில், சாணக்யாவின் நிறுவனர் ரங்கராஜ் பாண்டே பட்டிமன்ற நடுவராக இருந்தார். 'இளைஞர்களை அரசியல் நோக்கி ஈர்ப்பது கொள்கைதான்' என, 'டிவி' நடிகை தீபா, ஆர்.ஜே.விஜய் ஆகியோரும், 'இளைஞர்களை அரசியல் நோக்கி ஈர்ப்பது கவர்ச்சிதான்' என, பேராசிரியர் பழனி, பேச்சாளர் அன்னலட்சுமி ஆகியோரும் வாதங்களை முன்வைத்தனர். கலகலப்பாக நடந்த இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின், 'இளைஞர்களை அரசியலை நோக்கி ஈர்ப்பது கவர்ச்சிதான்' என, நடுவர் ரங்கராஜ் பாண்டே தீர்ப்பளித்தார். அவர் பேசியதாவது: திரைத்துறையில் இருந்து வந்த கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பல முன்னுதாரண திட்டங்களை கொண்டுவந்துள்ளனர். நாம் வாழும் காலத்தில் உள்ள நல்ல தலைவர்களை கண்டுகொள்ள மாட்டோம். மறைந்த நல்லகண்ணு நல்ல தலைவர். மறைந்த அவரைப்பற்றி இப்போது பேசுகிறோம். இளைஞர்கள் கொள்கையால் அல்ல; கவர்ச்சியால்தான் அரசியல் பக்கம் ஈர்க்கப்படுகிறார்கள் என்பது நிதர்சனம். அவர்களை கொள்கையின் பக்கம் செல்ல நாம் வழிகாட்ட வேண்டும். நடிகர்கள் அரசியலுக்கு வரகூடாது என்பதில்லை. நடிகர்கள் கொள்கையுடன் வர வேண்டும். வேட்பாளரை, கட்சியை, தலைவரை பார்த்து ஓட்டு போடுவது என்று முடிவெடுக்க கூடாது. யார் முதல்வராக இருக்க வேண்டும், இருக்க கூடாது என்பதுதான் நீங்கள் பார்க்க வேண்டும். முதல்வர் நல்லவராக இருந்தால், உங்கள் தொகுதியில் எம்.எல்.ஏ., கெட்டது செய்ய முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

உமாசங்கர்
ஏப் 12, 2026 17:08

கொள்கை ரீதியான ஈர்ப்பு மட்டுமே அரசியலுக்கு இருக்கிறது , கவர்ச்சி அரசியல் என்று காழ்ப்புணர்ச்சி காரணமாக கூற வேண்டாம். நல்ல கண்ணு ஐயா கால கொள்கை வேறு , அவர் கொள்கைக்கு அன்றும் இன்றும் ஆதரவு உண்டு . இன்றும் பாஜக என்னும் கட்சி வென்று ஆட்சியில் இருக்கிறது, கவர்ச்சி அரசியல் என்று ஏற்றுகொள்வீர்களா ? கேரளத்தில் கம்யூனிஸ்ட், தமிழ்நாட்டில் தி மு க என்று கொள்கை ரீதியான கட்சிகள் ஆள்கின்றன . கவர்ச்சி எண்ணமே தவறு , மாற்றம் என்பதே மாறாதது , அது தான் கொள்கை, இரண்டு கட்சிகள் ஆண்டுவிட்டன , அவர்கள் மூன்றாவது கட்சியை நோக்கி செல்கிறார்கள்.