/ செய்திகள் / கூட்டணியில் சேருவதும், பிரிவதும் இயல்பு: காங்கிரஸ்
கூட்டணியில் சேருவதும், பிரிவதும் இயல்பு: காங்கிரஸ்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ள நிலையில், அக்கட்சியை தி.மு.க., காட்டமாக விமர்சிக்க தொடங்கியுள்ளது.தி.மு.க., கூட்டணியில் சட்டசபை தேர்தலை சந்தித்த காங்கிரஸ் கட்சி, ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், 108 இடங்களில் வெற்றி பெற்ற த.வெ.க.,வுக்கு, காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, தி.மு.க., - காங்கிரஸ் கட்சியினர் இடையே, வார்த்தை போர் வெடித்துள்ளது. அதன் விபரம்:
காங்கிரஸ் கரூர் எம்.பி., ஜோதிமணி:
நீண்ட காலம் காங்கிரஸ் கட்சி, தி.மு.க., கூட்டணியில் பயணித்திருக்கிறது. ஒரு கூட்டணியில் இருக்கும் போது, ஏற்ற, இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். நானே பொதுவெளியில் முரண்பட்டிருக்கிறேன். இப்போது, தமிழகத்தின் நலன் மற்றும் எதிர்காலம் கருதி, தமிழக காங்கிரஸ் ஒருமனதாக த.வெ.க.,வுடன் கூட்டணி சேருவது என்ற முடிவை எடுத்துள்ளது. அரசியலில் கூட்டணிகள் சேருவதும், பிரிவதும் இயல்பானது தான். தி.மு.க., கூட 2014ல் லோக்சபா தேர்தல் அறிவிப்பிற்கு, ஒரு வாரம் முன், நீண்ட காலமாக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சியை வெளியேற்றியது. நாங்கள் திடீரென தனித்து போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டோம். அதற்காக நாங்கள் தி.மு.க.,வை காட்டமாக விமர்சிக்கவில்லை. அது ஒரு அரசியல் நிலைப்பாடு என்றே புரிந்து கொண்டோம். தற்போது, காங்கிரசுக்கு ஓர் அரசியல் நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, நாம் பரஸ்பரம் மரியாதையோடு, கூட்டணியில் இருந்து பிரிவதே நல்லது. இருபுறமும் தடித்த வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, தி.மு.க., தேர்தலில் தோல்வி அடைந்துள்ள சூழ்நிலையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தோல்வி அடைந்துள்ள நிலையில், நேற்று வரை கூட்டணியில் இருந்து விட்டு, தற்போது மிகுந்த காட்டமாக விமர்சிப்பது, அரசியல் நாகரிகமோ, காங்கிரஸ் கட்சியின் கலாசாரமோ அல்ல. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.விருதுநகர் தொகுதி காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர்:
நீண்ட நடந்து முடிந்த சட்டசபை தேர்தலை பொறுத்தவரை, பா.ஜ., தமிழகத்திற்குள் நுழையக்கூடாது என்ற எண்ணத்தில் மக்கள் ஓட்டளித்திருப்பது உறுதியாகிறது. மத வாத சக்திகள் உள்ளே நுழையக்கூடாது என்பதற்காகவே, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்த அ.தி.மு.க., திருப்பரங்குன்றத்தில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பா.ஜ., வரக்கூடாது; இந்த மண் பா.ஜ., -- ஆர்.எஸ்.எஸ்.,க்கு எதிரானது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தோல்வியடைந்ததும், ராஜிவ் உயிரிழந்த ஸ்ரீபெரும்புதுாரில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததும் வருத்தம் அளிக்கிறது. ஆட்சியில் பங்கு என்பதை தமிழகம் ஏற்றுக்கொள்ளாது என்று சொன்னார்கள்; ஆனால், தமிழக மக்கள் தெளிவாக முடிவெடுத்துள்ளனர். விஜய், பா.ஜ.,விற்கு எதிராக நின்று வெற்றி பெற்றுள்ளார். தி.மு.க., ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காகவே, அக்கட்சிக்கு எதிராக மக்கள் ஓட்டளித்துள்ளனர். 15 அமைச்சர்கள் தோல்வி அடைந்துள்ளனர். நாங்கள் எல்லாம் கூட்டணியில் தான் இருந்தோம்; அரசில் பங்கேற்கவில்லை. காங்., - தி.மு.க., கூட்டணி, 2026 தேர்தலுக்காக உருவாக்கப்பட்டது. தேர்தல் முடிந்து விட்டது. தமிழகத்தின் இரண்டு திராவிட கட்சிகளும், பல ஆண்டுகளுக்குப் பிறகு அகற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am