போதிய பஸ்கள் இல்லை; ஓட்டு போட முடியாமல் மக்கள் தவிப்பு
சென்னை: ஒரே நேரத்தில் போக்குவரத்து ஊழியர்கள் அதிகம் பேர் நேற்று விடுப்பில் சென்றதால், போதிய பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால், தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று ஓட்டு போட முடியாமல் பொது மக்கள் திண்டாடினர். ஓட்டுப் போடுவதற்கு பொது மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து தினமும் இயக்கக் கூடிய 2,092 பஸ்களுடன், 5,574 சிறப்புப் பஸ்கள் என 21, 22, 23ம் தேதிகளில், மொத்தம் 10,663 பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதிகாரிகள் சொல்வது என்ன?
அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: தேர்தலையொட்டி, சென்னையில் இருந்து வெளியூர்களுக்கும், வெளியூர்களில் இருந்து சென்னைக்கும் போதிய அளவில் பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால், நேற்று முன்தினம் மாலையில் திடீரென ஜி.எஸ்.டி., சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வெளியூர் சென்ற பஸ்கள் சென்னை உள்ளே வருவதில், பல மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. அதேநேரத்தில், கிளாம்பாக்கத்தில் ஒரே நேரத்தில் பல ஆயிரக்கணக்கானோர் திரண்டதால், உடனடியாக பஸ் சேவை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர். கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் நேற்று அதிகாலை 2:00 மணி வரையிலும் பஸ்கள் கிடைக்காததால், விரக்தியடைந்த 500க்கும் மேற்பட்ட பயணியர், பஸ் முனையத்தின் நுழைவு வாயிலுக்கு வந்து, ஜி.எஸ்.டி., சாலையில் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆனால், பாதுகாப்பிற்காக நின்றிருந்த போலீசார், அவர்களிடம் சாமர்த்தியமாக பேசி, போராட்டத்தை கைவிடும்படி செய்தனர்.தேர்தல் கமிஷனில் விஜய் கட்சி புகார்
த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர், தமிழக தலைமை தேர்தல் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர். பின், இருவரும் கூறியதாவது: இந்த தேர்தலில் ஓட்டளிப்பதற்கு தன்னெழுச்சியாக மக்கள் முன்வந்துள்ளனர். வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து ஓட்டளிக்க, ஏராளமானவர்கள் தமிழகம் வந்துள்ளனர். சென்னையில் இருந்து, தென் மாவட்டங்கள் உட்பட மாவட்டங்களுக்கு ஓட்டளிப்பதற்கு செல்ல போதுமான பஸ் வசதிகளை, அரசு ஏற்படுத்தி தரவில்லை. போக்குவரத்து துறை செயலர் ஜடாக் சிரு, சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் பிரபுசங்கர், அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் மோகன் ஆகியோர், இதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. ஓட்டு சதவீதம் அதிகரித்தால், தி.மு.க., தோல்வி அடையும் என்பதால், பஸ்களை இயக்காமல், இவர்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல் பட்டுள்ளனர். எனவே, இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து, பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என, தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்தினோம். ஆனால், ேதர்தல் கமிஷன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.நிர்வாக சீர்கேடு: சீமான் சீற்றம்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை, நீலங்கரையில் ஓட்டுப்பதிவு செய்த பின் அளித்த பேட்டி: மக்களுக்கு கடைசி வலிமை ஓட்டு தான். ஆனால், வேட்பாளர்கள், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாததால், 100 சதவீதம் ஓட்டுப் பதிவாகமல் உள்ளது. சொந்த ஊர்களுக்கு சென்று ஓட்டுப் போட, மக்களுக்கு போதியளவு பஸ் வசதி ஏற்படுத்தி தராதது, நிர்வாக சீர்கேடு. அரசின் பேராசையால் கிளம்பாக்கம் பஸ் நிலையம் கட்டி, மக்களுக்கு போதியளவு வசதி ஏற்படுத்தி தரவில்லை. அது மக்களுக்கு தொந்தரவாகவும், தொல்லையாகவும் உள்ளது. தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு எதிராக மாற்றம் தேவை. அதற்காக தான் நாங்கள் உழைத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am