தேர்தலில் போட்டியிடாமல் பிரசாரத்தில் களமிறங்க பிரேமலதா திட்டம்
- நமது நிருபர் - தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா தேர்தலில் போட்டியிடாமல், தீவிர பிரசாரத்தில் ஈடுபட போவதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., - அ.தி.மு.க., - நாம் தமிழர் - த.வெ.க., என நான்குமுனை போட்டி ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தி.மு.க., கூட்டணியில் இணைந்த தே.மு.தி.க.,வுக்கு, ராஜ்யசபா சீட் ஒதுக்கிய நிலையில், கூடுதல் தொகுதிகள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தி.மு.க., கூட்டணியில் நீடிக்கும் வி.சி., - இந்திய கம்யூ., போன்ற கட்சிகள் அதிருப்தியில் உள்ளன. இந்நிலையில், விஜயகாந்த் வெற்றி பெற்ற விருத்தாசலம் அல்லது ரிஷிவந்தியம் தொகுதியில் பிரேமலதாவும், விருதுநகர் அல்லது சாத்துார் தொகுதியில் அவருடைய மகன் விஜய பிரபாகரனும் போட்டியிடுவார்கள் என கூறப்படுகிறது. அதுபோல், தி.மு.க., கொடுத்த ராஜ்யசபா சீட், பிரேமலதா சகோதரரும், கட்சியின் பொருளாளரான சுதீஷூக்கு வழங்கப்பட்டது. இதனால், 21 ஆண்டுகளாக கட்சியில் உழைப்பவர்களுக்கு எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கு வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் உள்ளனர். இந்த நிலையில், பிரேமலதாவும் தேர்தலில் போட்டியிட்டால், அவர் மீது கட்சியினர் வெறுப்படையக் கூடும் என்பதால், இந்த தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து, தி.மு.க., கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட பிரேமலதா முடிவெடுத்துள்ளார். இது குறித்து அக்கட்சியினர் கூறுகையில்,''அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இணையும் என எதிர்பார்த்த நிலையில், திடீரென தி.மு.க.,வுடன் பிரேமலதா கூட்டணி அமைத்துவிட்டார். ''அவரது தம்பி சுதீஷ், ராஜ்யசபா எம்.பி.,யாகி விட்ட நிலையில், பிரேமலதாவும், விஜய பிரபாகரனும் சட்டசபைத் தேர்தலில் களமிறங்கினால், கட்சியில் இருப்போர் கடும் எரிச்சல் அடைவர். ''இது மற்ற தொகுதிகளில் போட்டியிடக் கூடிய தே.மு.தி.க., வேட்பாளர்களையும் பாதிக்கும். அதனால், இந்த தேர்தலில் போட்டியிடாமல், தீவிர பிரசாரத்தில் ஈடுபட பிரேமலதா முடிவு செய்துள்ளார்,'' என்றனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am