ஐ.டி., சோதனை என சமூக ஊடகத்தில் பதிவு; அசிங்கப்பட்டாரா காங்., செல்வப்பெருந்தகை?
சென்னை: வருமான வரித்துறை சோதனை என்ற பெயரில், ஹிந்தி பேசும் அதிகாரிகளால், தான் சிறைபிடிக்கப்பட்டு இருப்பதாக, தமிழக காங்கிரஸ் தலைவரும், ஸ்ரீபெரும்புதுார் தொகுதி காங்., வேட்பாளருமான செல்வப்பெருந்தகை கூறியது தவறானது என வருமான வரித் துறை தரப்பு தகவல் சொல்ல, இவ்விவகாரம், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகி உள்ளது. இதில் என்ன நடந்தது என புரியாமல், செல்வப்பெருந்தகைக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட கண்டனமும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரை அடுத்த மணிமங்கலத்தில் உள்ள தன் வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதாக செல்வப்பெருந்தகை நேற்று காலை கூறியது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் தன், 'எக்ஸ்' தள பக்கத்தில், 'தமிழகத்தில் பிரசாரம் செய்ய ராகுல் வந்த நிலையில், என் வீட்டிற்கு வந்த வருமான வரித்துறையினர், ஹிந்தி பேசும் அதிகாரிகளை வைத்து, 'சோதனை' என்ற பெயரில் என்னை சிறைபிடித்து வைத்துள்ளனர்' என, பதிவிட்டிருந்தார். உடனே, கண்டனம் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், 'இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதை மறந்து, பிரசாரம் முடிய 48 மணி நேரம் கூட இல்லாத நிலையில், எதிர்க்கட்சியினரை முடக்க, மத்திய பா.ஜ., அரசு செய்யும் அட்டூழியத்திற்கு, மக்கள் தக்க பதிலடி கொடுப்பர்' என்றார். சென்னை குன்றத்துாரில் பேட்டியளித்த செல்வப்பெருந்தகை, 'கன்னியாகுமரியில் நடந்த ராகுல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்க, விமானத்தில் திருவனந்தபுரம் செல்ல திட்டமிட்டிருந்தேன். ஆனால், நேற்று முன்தினம் இரவில், சீருடை அணியாத, தமிழ் பேசத் தெரியாத சிலர், தங்களை வருமான வரித்துறையினர் என கூறி, நான் வசிக்கும் பகுதியில் முற்றுகையிட்டனர். காலையில் விமானம் புறப்பட்ட பின், என்னால் 11:00 மணிக்கு அங்கு செல்ல முடியாது என்பது உறுதியான பின், அவர்கள் கலைந்து சென்றனர்' என்றார். இது தொடர்பாக, வருமான வரித்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, சிலர் கூறியதாவது: செல்வப்பெருந்தகையின் வீடு உள்ளிட்ட எந்த இடத்திலும் சோதனை நடத்தவில்லை. ராகுல் பிரசாரத்திற்கு செல்ல விடாமல் தடுத்ததாக பரப்பப்படும் தகவலில் உண்மை இல்லை. ஸ்ரீபெரும்புதுாரில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய, தி.மு.க., நிர்வாகி ஒருவர் வீட்டில் பணம் பதுக்கியுள்ளதாக, தேர்தல் பறக்கும் படையினர் வாயிலாக கிடைத்த தகவல் அடிப்படையில், வருமான வரித் துறை சார்பில் சோதனை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த தகவல் கசிந்து விட்டது. இதையடுத்து, சோதனையை தடுப்பதற்காக, இப்படியொரு நாடகத்தை செல்வப்பெருந்தகை அரங்கேற்றியுள்ளாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். இதற்கிடையே, 'செல்வப்பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்ததா, இல்லையா என்பது குறித்து, கவர்னர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்' என, தமிழக காங்., கலைப்பிரிவின் முன்னாள் துணைத் தலைவர் மயிலை அசோக்குமார் வலியுறுத்தி உள்ளார். 'தோல்வி பயத்தால் வசனம் பேசிய முதல்வர்' தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், 'ராகுலின் கூட்டத்திற்கு தனக்கு அழைப்பில்லை என்ற உண்மை வெளி வந்தால் அசிங்கமாகி விடும் என்ற பதற்றத்தில், தன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்ததாக செல்வப்பெருந்தகை நாடகமாடி உள்ளார். பள்ளி செல்லும் குழந்தைகள் போல் சாக்கு போக்கு சொல்லி மாட்டிக் கொண்டார். ஆனால், முதல்வர் ஸடாலின், இதை எல்லாம் அறியாமல், ஒரு மாநிலத்தின் முதல்வராக அடிப்படை விஷயங்களை கூட சரி பார்க்காமல், வடக்கு, தெற்கு என்று வசனம் பேசியிருப்பது, அவரது தோல்வி பயத்தைக் காட்டுகிறது' என கூறியுள்ளார். தலித் அமைப்புகள் புகார் கடந்த 18ம் தேதி தமிழகம் வந்த ராகுலை, தலித் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சந்தித்துள்ளனர். இது தொடர்பாக, எழுத்தாளர் ஷாலின் மரிய லாரன்ஸ் வெளியிட்ட பதிவில், 'துறையூர் தொகுதி காங்., வேட்பாளர் விச்சு என்கிற லெனின், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய அஸ்வத்தாமனின் நெருங்கிய கூட்டாளி. இவர்கள் இருவரும் செல்வப்பெருந்தகைக்கு நெருக்கமானவர்கள். தேர்தலில் லெனின் போட்டியிட முக்கிய காரணமாக இருந்தவர் செல்வப்பெருந்தகை என்ற செய்தி, இரு தினங்களுக்கு முன்னர் ராகுலிடம் தெரிவிக்கப்பட்டது' என கூறியுள்ளார். இதையடுத்தே, தென் மாவட்டத்தில் நடந்த பிரசாரத்திற்கு வர வேண்டாம் என, செல்வப்பெருந்தகைக்கு ராகுல் தடை விதித்ததாக கூறப்படுகிறது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am