Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


கிறிஸ்துவர்கள் ஓட்டு யாருக்கு? தி.மு.க., - த.வெ.க., 'திக்... திக்...'

கிறிஸ்துவர்கள் ஓட்டு யாருக்கு? தி.மு.க., - த.வெ.க., 'திக்... திக்...'
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

- நமது நிருபர் -
கிறிஸ்துவ மக்களின் ஓட்டுகளை பெற, தி.மு.க., - த.வெ.க., இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களின் ஓட்டுகள் யாருக்கு செல்லும் என்ற கேள்வி, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினர் ஓட்டுகளில், 8 சதவீதம் அளவிற்கு கிறிஸ்துவ ஓட்டுகள் உள்ளன. கன்னியாகுமரி, துாத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, திண்டுக்கல், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கிறிஸ்துவர்கள் பரவலாக வசித்து வருகின்றனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை, கிறிஸ்துவர்களின் ஓட்டுகள் அ.தி.மு.க.,விற்கு கிடைத்து வந்தன; அக்கட்சியின் தொடர் வெற்றிக்கு கைகொடுத்தன.

அவர் மறைவுக்கு பின், முஸ்லிம், கிறிஸ்துவர்கள் அடங்கிய சிறுபான்மையினர் ஓட்டுகள் முழுமையாக தி.மு.க., பக்கம் திரும்பின. இதனால், தி.மு.க., தொடர் வெற்றிகளை பெற்று வந்தது.

சட்டசபை தேர்தலில், கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த நடிகர் ஜோசப் விஜய், தன் த.வெ.க., சார்பில் 233 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார். சிறுபான்மையினர் ஓட்டுகளை குறிவைத்து பிரசாரம் செய்து வருகிறார்; குறிப்பாக, கிறிஸ்துவ மக்களின் ஓட்டுகளை முழுமையாக பெற வியூகம் அமைத்து வருகிறார்.

கிறிஸ்துவர்கள் அதிகம் வசிக்கும் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் அவர் போட்டியிடுகிறார். இதற்கிடையே, முஸ்லிம் வேட்பாளர்களை அதிகம் நிறுத்தி, அவர்களின் ஓட்டுகளை தி.மு.க., தக்க வைத்துக்கொண்டது.

அதே நேரத்தில், தி.மு.க.,விடம் இருந்து கிறிஸ்துவ ஓட்டுகள் கைநழுவும் நிலை ஏற்பட்டுள்ளது. அதை தவிர்க்க முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், வேட்பாளர்கள், பல்வேறு சர்ச்சுகளின் பாதிரியார்களை நேரில் சந்தித்து, தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு கோரி வருகின்றனர்.

பாதிரியார்கள் பலரும் தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளனர். ஆனால், சர்ச்சுகளுக்கு வரும் பெண்களும், இளைய தலைமுறையினரும், விஜய்க்கு ஆதரவளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவர்களை கவரும் வகையில், சர்ச்சில் முழங்காலிட்டு விஜய் வேண்டுதல் செய்த சம்பவம் சமீபத்தில் அரங்கேறியது. அதே நாளில் பாதிரியார்களை முதல்வர் சந்தித்து பேசிய பரபரப்பு, விஜய் செயலால் அடங்கிப்போனது.

எனவே, கிறிஸ்துவ சமுதாய மக்களின் ஓட்டுகள் யாருக்கு கிடைக்கும்; 'இயேசுவின் ரத்தம் ஜெயம்' யாருக்கு என்ற கேள்வி, அரசியல் வட்டாரத்தில் விவாதமாகி உள்ளது.

Advertisement