/ செய்திகள் /  வேட்புமனுதாக்கல் முன்னேற்பாடு பணிகள் குறித்து வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் எஸ்.பி., ஆய்வு  

 வேட்புமனுதாக்கல் முன்னேற்பாடு பணிகள் குறித்து வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் எஸ்.பி., ஆய்வு  

ரிஷிவந்தியம்: வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் வேட்பு மனுதாக்கல் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை எஸ்.பி., ஆய்வு செய்தார். நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் வரும் 30ம் தேதி துவங்கி, ஏப்., 6ம் தேதி வரை நடக்கிறது. ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்க வேண்டும். இதில் பிரதான கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் படை சூழ பேரணியாக நடந்து சென்று வேட்பு மனுவை வழங்குவர். இதையொட்டி வாணாபுரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து எஸ்.பி., அரவிந்த் நேற்று ஆய்வு செய்தார். இதில், மெயின்ரோட்டில் இருந்து தாலுகா அலுவலகத்திற்கு செல்லும் சாலை குறுகலாக இருப்பதால் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் நடந்து செல்ல முடியாது, எனவே, தொண்டர்களை மெயின்ரோடு பகுதியிலேயே நிறுத்துவது குறித்தும், தாலுகா அலுவலகத்திற்கு வெளியே 100 மீட்டர் தொலைவிற்கு வெளி நபர்கள் வராதவாறு இருக்கவும், தாலுகா அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தடுப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, ஏ.டி.எஸ்.பி., திருமால், டி.எஸ்.பி., பார்த்திபன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வெங்கடேசன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், வருவாய் ஆய்வாளர் மரிவாளன், வி.ஏ.ஓ., ஆனந்த் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !