/ செய்திகள் /  அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கட்டிய கோவிலில் திடீர் சோதனை

 அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கட்டிய கோவிலில் திடீர் சோதனை

மதுரை: மதுரை மாவட்டம் டி.குன்னத்துாரில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார், ஜெயலலிதாவுக்காக கோவில் கட்டி உள்ளார். அந்த கோவிலில் வைத்து தேர்தல் பணிகளை மேற்கொள்வதாகக் கூறி புகார் எழ, தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி உள்ளனர். இதையறிந்ததும், அங்கு குவிந்த அ.தி.மு.க., ஆதரவு வழக்கறிஞர்கள், 'ஆளுங்கட்சியின் கைப்பாவையாக செயல்பட்டு, கோவில் இருக்கும் புனிதமான இடத்தில் சோதனை நடத்துவது சரியல்ல' என, அதிகாரிகளிடம் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், அது குறித்து கொஞ்சமும் அச்சமின்றி அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் கூறியதாவது: வரும் ஏப்ரல் 23ல் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில், திருமங்கலம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் போட்டியிடுகிறார். அவருக்கு சொந்தமான கோவில் என்பதால், அந்த இடத்தில் வைத்து, தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள், தேர்தல் வெற்றிக்கான வியூகம் வகுத்தல் உள்ளிட்ட தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்காக, கோவில் இருக்கும் பகுதிக்கு கட்சியினர் அதிக அளவில் வந்து செல்கின்றனர். மற்றபடி, ஜெயலலிதா கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு, வழக்கமான அன்னதானமும் பிரசாதங்களும் வழங்கப்படுகின்றன. வேறு எந்த தவறான காரியங்களும் அங்கு நடைபெறவில்லை. ஆனால், தேர்தல் பறக்கும் படையினர், ஆளுங்கட்சியினர் துாண்டுதல் பேரில் கோவிலில் தொடர் சோதனை நடத்தி உள்ளனர். முழுக்க முழுக்க அதிகார துஷ்பிரயோகத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் நியாயமாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !