/ செய்திகள் / சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு எவ்வளவு?துல்லிய விபரங்கள் வெளியாவதில் இழுபறி 

சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு எவ்வளவு?துல்லிய விபரங்கள் வெளியாவதில் இழுபறி 

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு தொடர்பான துல்லியமான விபரங்களை வெளியிடுவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் நடந்த தேர்தலில் ஓட்டளிக்க, 5.73 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்று இருந்தனர். ஏப்.23ல் நடைபெற்ற ஓட்டுப்பதிவுக்கு, 75,064 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டன. திமுக- அதிமுக - தவெக- நாம் தமிழர் கட்சிகள் மோதிய, நான்கு முனை போட்டியில், அரசியல் கட்சிகளின் 935 வேட்பாளர்கள் உட்பட, 4,023 பேர் களத்தில் குதித்தனர். எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிக்கு பின், இறந்த வாக்காளர்கள், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை ஓட்டுரிமை வைத்துள்ளவர்கள் நீக்கப்பட்டனர். ஆனாலும், நடந்து முடிந்த ஓட்டுப்பதிவில், 85.15 சதவீத ஓட்டுக்கள் மட்டுமே பதிவாகி உள்ளன. மொத்தம், 4.88 கோடி வாக்காளர்கள் மட்டுமே ஓட்டளித்து, தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர். மீதமுள்ள 85 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஓட்டளிக்கவில்லை. ஓட்டுப்பதிவு அமைதியாக முடிந்த நிலையில், நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டு, தேர்தல் பறக்கும் படைகள் திரும்ப பெறப்பட்டு உள்ளன; வாகனை சோதனைகளும் நிறுத்தப்பட்டு உள்ளன. மறு ஓட்டுப்பதிவு தொடர்பாக, எந்த புகாரும் வரவில்லை. ஓட்டுப்பதிவு முடிந்து, 24 மணி நேரத்திற்கு மேலாகியும், அது தொடர்பான துல்லிய விபரங்களை, தேர்தல் கமிஷன் இன்னும் வெளியிடவில்லை. இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அலுவலக வட்டாரத்தில் கூறப்படுவதாவது: ஓட்டுப்பதிவு முடிந்ததும், ஒவ்வொரு மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இருந்தும், படிவம் '17 சி' சரிபார்க்கப்பட்டு, தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்படும். இதற்கென தனி பதிவேடு பராமரிக்கப்படும். அதில் ஒவ்வொரு வாக்காளரும், எந்த அடையாளத்தை பயன்படுத்தி ஓட்டளித்தார் என்பது உள்ளிட்ட விபரங்களும், எத்தனை ஆண் வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் ஓட்டளித்தனர் என்ற துல்லியமான புள்ளி விபரங்களும் இடம்பெற்று இருக்கும். ஆனால், 10 மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், இதுவரை ஓட்டுப்பதிவு துல்லிய விபர அறிக்கையை அனுப்பவில்லை. அங்குள்ள, 300க்கு மேற்பட்ட ஓட்டுச்சாவடிகளில் நடந்த ஓட்டுப்பதிவுகளை சரிபார்க்க வேண்டியுள்ளது. அவற்றை சரி செய்து அனுப்பியதும், துல்லியமான ஓட்டுப்பதிவு விபரங்களை தேர்தல் கமிஷன் முறைப்படி வெளியிடும்.இவ்வாறு அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !