அதிருப்தியில் உள்ள அரசு ஊழியர்கள் 'நோட்டா'வுக்கு ஓட்டு?
சென்னை: அரசு ஊழியர்கள், தமிழக அரசின் பொதுத் துறை நிறுவன பணியாளர்களில் அதிகம் பேர், 'நோட்டா'வுக்கு ஓட்டுகளை பதிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, பொதுத் துறை நிறுவனங்களின் பணியாளர்கள் கூறியதாவது: பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துவது, அரசு துறைகள் மற்றும் மின் வாரியம், போக்குவரத்து கழகம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறை வேற்றக் கோரி, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டோம்.
இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக, 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., உறுதி அளித்தது. ஆனால், பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற்றாக, தமிழக உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை, தமிழக அரசு, இந்தாண்டு துவக்கத்தில் அமல்படுத்தியது.
பல ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்பவில்லை. இதனால், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன பணியாளர்கள், ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
ஏற்கனவே, 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க.,வும், மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. இந்த சட்டசபை தேர்தலில், ஆட்சிக்கு வந்தாலும் நிறைவேற்றுமா என்பது சந்தேகம் தான்.
இரு கட்சிகளுக்கு மாற்றாக, த.வெ.க., தலைவர் விஜய்க்கு ஓட்டளித்தாலும், அவர் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை. எனவே, பல அரசு பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், ஜனநாயக கடமையை ஆற்றுவதுடன், தங்களின் அதிருப்தியை பதிவு செய்யும் வகையில், 'நோட்டா'வுக்கு ஓட்டளித்துள்ளனர்.
அதன் வாயிலாக, யாருக்கும் ஆதரவு இல்லை என்பதை உறுதி செய்துள்ளனர். எனவே, கடந்த முறையை விட, இந்த முறை, 'நோட்டா' ஓட்டுகள் எண்ணிக்கை அதிகம் இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்