பெண்கள் பற்றி சர்ச்சை பேச்சு: திமுக ஆதரவாளர் பொன்ராஜ் மீது விஜய் போலீசில் புகார்
சென்னை: தவெக பெண் தொண்டர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக ஆதரவாளர் பொன்ராஜ் மீது தவெக தலைவர் விஜய் நேரில் டிஜிபி அலுவலகத்தில் நேரில் சென்று புகார் அளித்துள்ளார்.
திமுக ஆதரவாளரான பொன்ராஜ், தவெக பெண் தொண்டர்களை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்து இருந்தார். இதற்காக அவரை தவெக நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவரது பெயரை குறிப்பிடாமல் தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் திமுகவின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார்.
திமுக தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க. அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தவெகவைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிக்கும் இச்செயலால், வருகின்ற தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி திமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி. இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் கூறியுள்ளார்.
புகார்
இந்நிலையில், டிஜிபி அலுவலகத்திற்கு வந்த விஜய், ஏடிஜிபியை நேரில் சந்தித்து பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.
விஜய் தனது புகார் மனுவில், பொன்ராஜ், தவெக பெண்களை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து வருகிறார். பொன்ராஜ் திமுக, அரவணைப்பில் இருப்பதால் தவெக நிர்வாகிகளை எல்லை கடந்து அநாகரிகமாக பேசி வருகிறார். அவர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேணடும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
விஜய் உடன் செங்கோட்டையனும் உடன் வந்தார்.
புகார் அளித்த பிறகு செங்கோட்டையன் கூறியதாவது: திமுக ஆதரவு இருப்பதால் பொன்ராஜ் இப்படி பேசுகிறார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியுள்ளோம். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர் எனத் தெரிவித்தார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்