Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


கலப்பையா? கையா? கலவரமாகும் காரைக்குடி!

கலப்பையா? கையா? கலவரமாகும் காரைக்குடி!
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதி யாருக்கு என்பதுதான் அத்தொகுதியில் இப்போதைய ஹாட் டாபிக்.

காரைக்குடி தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ., காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாங்குடி. 2021 தேர்தலில் உட்கட்சி பூசல், தி.மு.க., நெருக்கடிகளை மீறி, தன் ஆதரவாளர் மாங்குடிக்கு சீட் வாங்கி கொடுத்தார், முன்னாள் மத்திய அமைச்சரும் காங்., - எம்.பி.,யுமான ப.சிதம்பரம்.

தற்போதும் தனக்குத்தான் மீண்டும் 'சீட்' என்று முழு நம்பிக்கையுடன், சிட்டிங் எம்.எல்.ஏ., மாங்குடி தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகிறார். ஆனால், இம்முறை காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் நிற்கப் போவதால், அத்தொகுதி ஸ்டார் தொகுதியாக மாறியுள்ளது.

எங்கோ ஒரு தொகுதியில் போட்டியிட்டாலே, ப.சிதம்பரம் போன்றோரின் செயல்பாடுகளை மிகக் கடுமையாக விமர்சிக்கும் சீமான், சிதம்பரத்தின் சொந்தத் தொகுதியான காரைக்குடியில் போட்டியிடும்போது, சிதம்பரத்தை விட்டு வைப்பாரா என்ன?

இத்தனை ஆண்டு காலம் அமைச்சர், எம்.பி., என பல்வேறு பொறுப்புகளில் இருந்தும், தொகுதிக்கு எதையுமே செய்யவில்லை என்பதை, புள்ளிவிபரங்களுடன் சேகரித்து வைத்திருக்கும் சீமான், தேர்தல் பிரசாரத்தில் சிதம்பரத்தை வறுத்தெடுக்க திட்டம் போட்டு காத்திருக்கிறார்.

இந்நிலையில், 'சீமான் என்ன, யார் போட்டியிட்டாலும், இந்த முறை தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் களம் இறக்கப்படுவது உறுதி' என, சூரியன் கட்சி தொண்டர்கள், சுட்டெரிக்கும் சூரிய உஷ்ணத்தையும் பொருட்படுத்தாமல், தெருத்தெருவாகச் சென்று கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையில், 'மாங்குடியாவது; மசினகுடியாவது' என்று சொல்லி, அமைச்சர் பெரிய கருப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவனுக்கு நம்பிக்கையான தி.மு.க.,வைச் சேர்ந்த கான்ட்ராக்டர் ஒருவருக்கு 'சீட்' வாங்கியே ஆக வேண்டும் என்ற முடிவில், தி.மு.க.,வினர் சென்னை அறிவாலயத்துக்கு பக்கத்தில் உள்ள ஹோட்டலில் ரூம் போட்டு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தவிர, தி.மு.க., இளைஞரணி, மகளிரணி, உட்பட பல்வேறு நிர்வாகிகளும் தங்களுக்கே 'சீட்' வழங்க வேண்டும் என்று தலைமையை நெருக்கி வருகின்றனர்.

ஆனால் காங்., நிர்வாகிகளோ, 'இம்முறை காரைக்குடி மட்டுமல்ல; சிவகங்கையும் எங்களுக்குத்தான்' என்று சொல்லி கையை உயர்த்துகின்றனர். அதேநேரம், 'தி.மு.க.,வுக்கு காரைக்குடியில் தரமான வேட்பாளர்' என்பதையும் தங்கள் தரப்புக்கான பலம் என்று காங்கிரசார் சொல்லி வருகின்றனர்.

இதுகுறித்து காங்., நிர்வாகிகள் கூறியதாவது: எங்களுக்குத்தான் மீண்டும் 'சீட்' கிடைக்கும். எந்த சூழ்நிலையிலும், சொந்த தொகுதியான காரைக்குடியை விட்டுத்தர தலைவர் முன்வர மாட்டார். தவிர, தற்போதைய காங்., - எம்.எல்.ஏ., மீது பொதுமக்களுக்கு எந்த அதிருப்தியும் இல்லை. கூடுதலாக சிவகங்கையும் கிடைத்தால், அங்கும் காங்., வேட்பாளர்கள் வெற்றி பெறு வர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement