நண்பர்களை மோத விட்ட உதயநிதி; கார்த்திக் - ஆதவ் அர்ஜுனா தவிப்பு
சென்னை வில்லிவாக்கம் தொகுதியில், தி.மு.க., சார்பாக, அண்ணா நகர் எம்.எல்.ஏ., மோகனின் மகன் கார்த்திக், அ.தி.மு.க., சார்பில் முன்னாள் எம்.பி., விஜயகுமார், நா.த.க., சார்பில் திருநங்கை ரோஷிணி, த.வெ.க., சார்பாக, தேர்தல் மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இதில், கார்த்திக் - ஆதவ் இருவரும், தி.மு.க.,வில் நண்பர்களாக வலம் வந்தவர்கள்.
முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் வரவு, செலவுகளை கவனித்து வருபவர் கார்த்திக். இதனால், உதயநிதியை காட்டிலும் சபரீசனிடம் நெருக்கமாக இருக்கிறார். அதோடு, கடந்த 2019ல், தி.மு.க.,வின் தேர்தல் பணிகளை கவனிக்க, ஆதவ் அர்ஜுனாவின், 'வாய்ஸ் ஆப் காமன்' நிறுவனத்தை, சபரீசன் உள்ளே கொண்டு வந்தார். ஆதவை, உதயநிதிக்கு ஆரம்பத்தில் இருந்தே பிடிக்கவில்லை. ஆனால், கார்த்திக்கும் ஆதவும் நண்பர்களாகினர்.
இருவரும் தெலுங்கு பேசுபவர்கள் என்ற ஒற்றுமையும் இருந்ததால், கட்சி பணியை தாண்டி நெருக்கமாகினர். பின், வி.சி.க.,வில் இணைந்த ஆதவ், உதயநிதியை கடுமையாக சாடியதால், வி.சி.க.,வில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, த.வெ.க.,வில் சேர்ந்து, முன்பை விட அதிகமாக உதயநிதியையும் தி.மு.க.,வையும் விமர்சித்து வருகிறார். இது, உதயநிதியை கோபமடைய வைத்தது. ஆனாலும், கார்த்திக் - ஆதவ் நட்புறவு நீடித்தது.
இதற்கிடையே, அண்ணா நகரில் தன் மகனை நிறுத்த மோகன் விரும்பினார். அதற்காக முதல்வரிடம் பேசி ஒப்புதலும் வாங்கி இருந்தார். அதன்படி, தொகுதிக்குள் கார்த்திக் ஓராண்டாக வலம் வந்தார். கிழக்கு கடற்கரை சாலையில் இருந்த வீட்டை காலி செய்து, அண்ணா நகரில் உள்ள அப்பா வீட்டுக்கு வந்து விட்டார்.
தி.மு.க., வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் கட்டத்தில், அண்ணா நகர் தொகுதியை, தன் ஆதரவாளரான சிற்றரசுக்கு ஒதுக்க உதயநிதி அழுத்தம் கொடுத்தார். 'ஆதவ் மீதான கோபத்தில், கார்த்திக்கை பழிவாங்க வேண்டாம்' என, ஸ்டாலின் சொல்லியும் உதயநிதி கேட்கவில்லை.
இறுதியாக கார்த்திக், நேரில் போய் உதயநிதியிடம் பேசி பார்த்தார். அப்போது, 'உன்னால் உன் நண்பன் ஆதவை எதிர்க்க முடியாது என ஒப்புக்கொள்; அண்ணா நகரையே தருகிறேன்' என கார்த்திக்கை கேலி செய்திருக்கிறார் உதயநிதி. இதனால் கோபமான கார்த்திக், 'வில்லிவாக்கத்தில் நிற்கிறேன்; வெற்றி பெற்று காட்டுகிறேன்' என ஒப்புக்கொண்டார்.
மறுபக்கத்தில், ஓராண்டுக்கு முன்பாக வில்லிவாக்கத்தை தேர்வு செய்து, வேலை செய்து வைத்திருக்கும் ஆதவ், வசதி படைத்த தன் நண்பனே போட்டிக்கு வருவார் என நினைக்கவில்லை. இதனால், என்ன செய்வது என்று தெரியாமல், ஆதவும் தவிக்கிறார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்