/ செய்திகள் / பூத் ஏஜன்ட்களுக்கு இன்னொரு கவனிப்பு; விபரங்களை சேகரிக்கும் தி.மு.க., தலைமை

பூத் ஏஜன்ட்களுக்கு இன்னொரு கவனிப்பு; விபரங்களை சேகரிக்கும் தி.மு.க., தலைமை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவின் போது, அனைத்து தொகுதிகளிலும் பதிவான ஓட்டுகளின் விபரங்களை, பூத் வாரியாக தி.மு.க., தலைமை கேட்டு பெற்றுள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள, 234 சட்டசபை தொகுதிகளில், 75,064 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில், 4.88 கோடி வாக்காளர்கள் ஓட்டளித்தனர். ஆளும் கட்சியான தி.மு.க., சட்டசபை தேர்தலுக்கு, சில மாதங்களுக்கு முன்பே பூத் கமிட்டி அமைத்து, தன் பணியை தொடங்கியது. அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியலில் உள்ள நபர்களில், 30 சதவீதம் பேரை, ஓரணியில் தமிழகம் என பெயரிட்டு, தங்கள் கட்சியில் இணைக்கும் பணியை மேற்கொண்டது. இது சில இடங்களில், 40 சதவீதம் என அதிகரித்தது. இந்த கட்டமைப்பை தி.மு.க., விடாமல் தொடர்ந்து மேம்படுத்தும் வகையிலான பணியை, மும்முரமாக மேற்கொண்டது. இப்பணிக்கு அமைக்கப்பட்ட பூத் கமிட்டியில், பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து இணைக்கப்பட்டனர். இதில் இணைக்கப்பட்ட பெண்கள், மண்டல வாரியாக நடந்த மகளிர் மாநாடு நிகழ்வுகளுக்கு, 'கவனிப்பு'டன் அழைத்து செல்லப்பட்டனர். அனைத்து பூத்களிலும், பெண்கள் ஓட்டுகளை கவரும் வகையில், பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. பிரசாரத்துக்கு தனிப்பட்ட பிரத்யேக பயிற்சி அளிக்கப்பட்டு குறிப்புகள் மற்றும் பதிவேடுகள் வழங்கப்பட்டன. ஓட்டுப்பதிவுக்கு முன்தினம் வரை, இந்த குழுவினர் வீடு வீடாக சென்று, 8,000 ரூபாய் கூப்பன் வழங்குவது, ஓட்டுக்கு பணம் வழங்குவது போன்ற பணிகளில் மும்முரமாக ஈடுபடுத்தப்பட்டனர். பூத் ஏஜன்ட்களுக்கு, தேர்தல் ஆணையம் தரப்பில் வாக்காளர் பட்டியலுடன் படிவம் - 17 குறிப்பேடு வழங்கப்பட்டது. இதில் பதிவான ஓட்டு விபரம் மட்டுமே பதிவு செய்யப்படும். ஆனால், தி.மு.க., பூத் ஏஜன்ட்கள் தங்கள் கட்சிக்கு யாரெல்லாம் ஓட்டளித்துள்ளனர் என்ற விபரங்களையும் சேர்த்து பதிவு செய்து கொண்டனர். ஓட்டுப்பதிவு முடிந்த அடுத்த நாள், இந்த விபரங்கள் அனைத்தும், பகுதிவாரியாக கட்சி நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. அவை நேற்று முன்தினம், மாவட்ட நிர்வாகிகள் வாயிலாக கட்சி தலைமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கைக்கு பின், இந்த விபரங்கள் ஒப்பீடு செய்யப்படும். சரியாக இருக்கும்பட்சத்தில், சிறப்பாக தேர்தல் பணியாற்றியோருக்கு, மற்றொரு 'கவனிப்பு' செய்யப்படும் என்கின்றனர் கட்சியினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !