/ செய்திகள் /  ஒரு தொகுதியையாவது மாற்றித்தர அ.தி.மு.க.,விடம் வலியுறுத்தும் பா.ஜ.,

 ஒரு தொகுதியையாவது மாற்றித்தர அ.தி.மு.க.,விடம் வலியுறுத்தும் பா.ஜ.,

சென்னை: 'புதுக்கோட்டை, கந்தர்வ கோட்டை ஆகிய தொகுதிகளில், ஒன்றை கொடுத்து விட்டு, வேளச்சேரியை பெறுங்கள்' என, தமிழக பா.ஜ., மையக் குழு கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள், மத்திய அமைச்சர் பீயூஷ் கோயலிடம் வலியுறுத்தி உள்ளனர். தமிழக பா.ஜ., மையக் குழு கூட்டம், சென்னை தி.நகரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில், நேற்றிரவு நடந்தது. இதில், பீயூஷ் கோயல், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் நடத்தப்பட்ட ஆலோசனை குறித்து, கட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கூட்டத்தில், 'பா.ஜ.,வுக்கு ஒதுக்கிய, 27 தொகுதிகளில் பல தொகுதிகள் சரியான தேர்வாக இல்லை. அ.தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டாலும், வேட்பு மனு தாக்கலுக்கு ஏப்., 6ம் தேதி தான் கடைசி நாள். எனவே, புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய தொகுதிகளில், ஏதேனும் ஒன்றை அ.தி.மு.க.,விடம் வழங்கிவிட்டு, ஒரு தொகுதியையாவது மாற்றி தர வலியுறுத்த வேண்டும். வேளச்சேரியை கேட்டு பெறுங்கள்' என, பீயூஷ் கோயலிடம், அண்ணாமலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு, 'இது சரிப்பட்டு வருமா' என, பீயூஷ் கோயல் கேட்டுள்ளார். 'பா.ஜ., வேட்பாளர்கள் ஏப்., 4ல் மனு தாக்கல் செய்ய உள்ளனர். அன்று, பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். எனவே, 6ம் தேதி வரை வேட்பு மனு தாக்கலுக்கு அவகாசம் உள்ளது. கேட்டால் கிடைக்க வாய்ப்புள்ளது' என, தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமியிடம், இரவே தொலைபேசியில் பேசுவதாக பீயூஷ் கோயல் தெரிவித்தார். பிரதமரின் தமிழக வருகைக்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !