சமூகவலைதளங்களில் பரவும் பொய் தகவல்கள், வீடியோக்கள் வேட்பாளர்கள் கொதிப்பு
மதுரை: தி.மு.க., -அ.தி.மு.க., -த.வெ.க., வேட்பாளர்கள் சிலர் குறித்து சமூகவலைதளங்களில் பரவும் தகவல்களால் அவர்கள் கொதிப்படைந்துள்ளனர். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதா அல்லது இதற்கு மறுப்பு சொல்லியே நேரத்தை வீணடிப்பதா என புலம்புகின்றனர்.
த.வெ.க., தலைவர் விஜய் தனது கட்சி வேட்பாளர்களை 234 தொகுதிகளிலும் நிறுத்தியுள்ளார். மார்ச் 29ல் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. 'சீட்' கிடைக்காத, புறக்கணிக்கப்பட்ட சில அதிருப்தியாளர்கள் மார்ச் 30 முதல் த.வெ.க., வேட்பாளர்களின் பழைய வீடியோக்களை தேடிப்பிடித்து வைரலாக்கி வருகின்றனர்.
குறிப்பாக கோவை கவுண்டம்பாளையம் த.வெ.க., வேட்பாளர் கனிமொழி, அடிப்படையில் ஜோதிடர். இவர் இக்கட்சியில் சேரும் முன் பேசிய வீடியோவில், 'விஜய் முதல்வராகும் வாய்ப்பு இல்லை' என ஜோதிடத்தின் அடிப்படையில் கருத்து தெரிவித்திருந்தார். 'மருத்துவ ஜோதிடம் என்பது ஜோதிடத்தின் கிளை. ஒருவரின் ஜாதகத்தை வைத்து என்ன நோய் ஏற்படும் என கண்டறியலாம். மருத்துவ ஜோதிடம் மூலம் புற்றுநோயை கூட நுாறு சதவீதம் குணப்படுத்தலாம்' என்று பேசிய வீடியோ அவருக்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் சென்னை த.வெ.க., வேட்பாளர் ஒருவர், ரவுடியிஸத்தில் ஈடுபட்ட வீடியோவும், 'கஞ்சா கடத்தல் வழக்கில் இருந்து ஜாமினில் வந்த பத்தே நாளில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு த.வெ.க., வேட்பாளரானவர்' என்ற தகவலும் சமூகவலைதளத்தில் பரவி வருகிறது. இதனால் சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதா அல்லது இதற்கு மறுப்பு சொல்லியே நேரத்தை வீணடிப்பதா என கொதிப்படைந்துள்ளனர்.
பிரசாரத்தில் திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்றம் உத்தரவு இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. தற்போது இத்தொகுதி அ.தி.மு.க., வேட்பாளராக ராஜன்செல்லப்பா உள்ளார். இவர் திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அகற்றப்படும் என்றுக்கூறியதாக பொய்யான தகவல் பரவியது.
அதேபோல் தி.மு.க., வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டியன், 'தீபம் ஏற்றுவதை தடை செய்யும் விதமாக சட்டமசோதா கொண்டு வரப்படும்' என கூறியதுபோல் பொய்யான தகவல் சமூக ஊடகங்களில் பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த இரு கட்சியினரும் மறுப்பு தெரிவித்து 'இது தி.மு.க.,வின் சதி; அ.தி.மு.க.,வின் சதி' என மாறி மாறி சமூகவலைதளங்கள் வாயிலாகவே 'பிரசாரம்' செய்து வருகின்றனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்