- நமது நிருபர் - 'தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து, செல்வப்பெருந்தகையை நீக்க வேண்டும்' என, அக்கட்சியின் நிர்வாகிகள், 42 பேர் கையெழுத்திட்ட கடிதம், டில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் எம்.ஜோதி, பொன்கிருஷ்ணமூர்த்தி, கே.விஜயன், தணிகாசலம், அருள் பெத்தையா, எஸ்.வி.ரமணி, ரங்கபாஷ்யம், திருச்சி வேலுச்சாமி, செங்கம் குமார் உட்பட, 42 பேர் எழுதியுள்ள கடிதம்: நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக கட்சிக்காக உழைத்து, அங்கீகாரத்திற்காக ஏங்கி நிற்கும் தொண்டர்களின் நம்பிக்கையை, இந்த தேர்தல் நிறைவேற்றும் என, எதிர்பார்த்தோம். ஆனால், ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் மட்டும் தான் கிடைத்துள்ளனர். இதற்கு பொறுப்பு யார்? தமிழக அரசியல் நிலவரத்தை உண்மையாக எடுத்துரைக்கத் தவறியவர்களா அல்லது தி.மு.க., ஆதிக்கத்திற்குள் செயல்பட்டவர்களா? ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு, அதிக தொகுதிகள் என, த.வெ.க., தரப்பிலிருந்து அழைப்பு இருந்தபோதும், அந்த கூட்டணியை வேண்டாம் என, தலைமையிடம் வலியுறுத்தி, கட்சிக்குள்ளேயே மிரட்டல் அரசியல் செய்து, ஒரு நல்ல வாய்ப்பை முறியடித்தவர்கள் மீது, அகில இந்திய தலைமை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க., கூட்டணி பொருந்தா கூட்டணி என்பதை அறிந்திருந்த போதும், கட்சி கட்டளைக்கு கட்டுப்பட்டு தேர்தல் பணியில் ஈடுபட்டோம். த.வெ.க., - காங்கிரஸ் கூட்டணி அமைத்திருந்தால், 180 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்போம். தேர்தல் முடிந்த பின் உண்மையை சொல்லாமல் இருப்பது கட்சிக்கே துரோகம் செய்வதாக இருக்கும் என்பதால், இந்த கூட்டறிக்கையை வெளியிடுகிறோம். தமிழகத்தில் காங்கிரஸ் ஒரு மிகப்பெரிய அரசியல் வாய்ப்பை இழந்ததற்கு பொறுப்பு யார்; உண்மை நிலையை மறைத்து, தவறான தகவலை வழங்கியவர்கள் யார் என்பதை கண்டறிந்து, அவர்களிடம் விளக்கம் கேட்க வேண்டும். ஜாதி, மதம், பணம் போன்ற எல்லைகளுக்கு அப்பாற்பட்ட புதிய தலைமையை, தமிழக காங்கிரசில் உடனே உருவாக்க வேண்டும். கூட்டணி அமைப்பதில் தோல்வி, தொகுதி கணக்கீட்டில் தோல்வி, உரிய இடங்களை பெறுவதில் தோல்வி கண்டதால், கட்சிக்கு உடனே சீர்திருத்தமும் நடவடிக்கையும் அவசியம். எனவே, தமிழக தலைமையை உடனே மாற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழக தலைவர் மாற்றப்படுவார் சட்டசபை தேர்தல் மூலம், மக்கள் மூன்று விதமான தீர்ப்பை அளித்துள்ளனர். த.வெ.க.,விற்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்காவிடில், பா.ஜ., ஊடுருவி விடும். பா.ஜ., வரக்கூடாது என்பதே காங்கிரசின் நோக்கம். இதற்காகவே, தி.மு.க., உடன் கூட்டணி வைத்தோம். தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை விரைவில் மாற்றப்படுவார். த.வெ.க., -- காங்., கூட்டணி, 2029 லோக்சபா தேர்தலிலும் தொடரும். - சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் மத்திய அமைச்சர், காங்.,