/ செய்திகள் / ஓட்டு எண்ணும்போது சிரிக்க கூடாது: தேர்தல் அலுவலர்களுக்கு அட்வைஸ்

ஓட்டு எண்ணும்போது சிரிக்க கூடாது: தேர்தல் அலுவலர்களுக்கு அட்வைஸ்

கோவை: ஓட்டும் எண்ணும் பணியில் ஈடுபடும் தேர்தல் அலுவலர்கள் முகத்தில் எந்த உணர்ச்சியையும் வெளிபடுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்றது. ஓட்டு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெறவுள்ளது. கோவையில் உள்ள 10 தொகுதிகளுக்கும் தடாகம் சாலையில் உள்ள ஜி.சி.டி. கல்லூரியில் ஓட்டுகள் எண்ணப்படும். இந்தப் பணிகளில் ஈடுபடவுள்ள அரசு அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் நேற்று நடைபெற்றது. ஓட்டு எண்ணிக்கை பணியில் ஈடுபடவுள்ள ஒவ்வொரு அலுவலரும் காலை முதல் மாலை வரை பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பயிற்சியில் விளக்கமளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட தேர்தல் அலுவலரும், கோவை மாவட்ட ஆட்சியருமான பவன்குமார் கிரியப்பனர் பேசியதாவது: கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் எங்கும் சோதனை ஓட்டுப்பதிவு நடைபெறவில்லை. அதனால் கணக்கீட்டில் எந்த பிரச்னையும் வராது. ஓட்டு விபரங்களை எழுதும்போது எந்த பிழையும் இருக்கக் கூடாது. ஒவ்வொரு சுற்று முடிவிலும் ஆவணங்களில் ஏஜென்ட்களிடம் கையெழுத்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஓட்டு எண்ணிக்கையில் ஏஜென்ட்கள் ஏதாவது ஆட்சேபனை செய்தால் விதிகள்படி தான் செயல்படுகிறோம் என்று அவர்களிடம் கையெழுத்து வாங்கியதை காட்டலாம். அங்கு வேறு ஏதாவது பிரச்னை எழுந்தால் சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காண வேண்டும். ஓட்டுப்பதிவின்போதே கோவையில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. அதேபோல ஓட்டு எண்ணிக்கை பணியையும் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் பேசுகையில், இயந்திரத்தில் பட்டன் எதையாவது மாற்றி அமுக்கி விட்டோம் என்று பயந்துவிட வேண்டாம். உங்கள் முக பாவனை தான் முக்கியம். ஓட்டு எண்ணும் பணியில் சிரிப்பது, கோபப்படுவது, பதற்றப்படுவது போன்ற எந்த உணர்ச்சியும் அன்றைக்கு இருக்கக் கூடாது. பணியை முடித்தோமா வந்தோமா என்று இருக்கணும். எதுவுமே நடக்காதது போல் இருந்தால் சமாளித்து வெளியில் வந்துவிடலாம். ஏஜென்ட் யாராவது தெரிந்தவர் என்று கைக்காண்பித்தால் உங்கள் கதையுடன், தொகுதி தேர்தல் அலுவலரின் கதையும் முடிந்துவிடும். அங்கு உங்களின் உணர்ச்சியை வெளிப்படு த்தக் கூடாது, என்றார்.

கோவை தெற்கில் கூடுதல் கவனம்

பிரசாரம், ஓட்டுப்பதிவின்போதே கோவை தெற்கு தொகுதி அதிக கவனத்தை ஈர்த்திருந்தது. ஓட்டு எண்ணிக்கையின் போதும் கோவை தெற்கு தொகுதியில் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தெற்கு தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை கீழ் தளத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவான மின்னணு இயந்திரங்கள் முதல் தளத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்று முடிந்தவுடன்தான், அடுத்த சுற்றுக்கான இயந்திரங்கள் மேலே இருந்து எடுத்து வரப்படும். இதைப்பற்றி அங்குள்ள ஏஜென்ட்கள், அங்குள்ள பணியாளர்களுக்கு தெளிவாக விளக்கி சலசலப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !