பட்டுவாடாவில் கை வைத்தது யார் யார்? லிஸ்ட் எடுக்கிறது கரூர் டீம்
கோவை: சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு கடந்த 23ம் தேதி நடைபெற்றது. வேட்பாளர் அறிவிப்பு, பிரசாரம், பணப்பட்டுவாடா எல்லாவற்றிலும் கோவை மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தது. ஓட்டுப்பதிவு முடிந்தும் கோவை அரசியல் களத்தின் பரபரப்பு ஓயவில்லை.
கோவையில் உள்ள தொகுதிகளில் தி.மு.க., அ.தி.மு.க. சார்பில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. குறைந்தபட்சம் ஒரு ஓட்டுக்கு ரூ.1,000 தொடங்கி அதிகபட்சம் ரூ.5,000 வரை தி.மு.க.வினர் பட்டுவாடா செய்தனர்.
கோவை தி.மு.க. நிர்வாகிகள் சொதப்பிவிடுவார்கள் என்பதால் கரூரில் இருந்து செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் வந்து வேலையை மேற்பார்வை செய்தனர். கொடுப்பதற்கு கொடுத்த பணத்தில் கணிசமாக எடுப்பது பெரும்பாலான நிர்வாகிகளுக்கு பழக்கம் என்பதால், தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்படியிருந்தும் கரூர்காரர்களின் கண்களில் மண்ணை தூவி கோவை நிர்வாகிகள் பலர் பெரும் தொகையை ஆட்டையை போட்டுவிட்டனர் என்று புகார் எழுந்தது.
பணம் கிடைக்காத பெண்கள் செந்தில் பாலாஜியிடமே புகார் தெரிவிக்க, அவர் மூத்த நிர்வாகிகளிடம் விசாரித்துள்ளார். அவற்றில் கோவை தெற்கு மற்றும் கோவை வடக்கு தொகுதிகளில் தான் பட்டுவாடா பணம் அதிகம் திசைமாறியது தெரியவந்துள்ளது. சராசரியாக ஒரு பூத் கமிட்டியில் 200 ஓட்டுகளுக்கான பணத்தை அந்தந்த பகுதி நிர்வாகிகள் சுருட்டியிருப்பது தெரிந்து, செந்தில் பாலாஜி கோபமடைந்துள்ளார்.
முதல்கட்டமாக கோவை தெற்கு, வடக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் பட்டுவாடா குறித்து விசாரிக்க கரூரில் இருந்து தனி குழு வந்துள்ளது. பூத் வாரியாக கரூர் டீமை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பட்டுவாடா செய்த பெயர் பட்டியலை வைத்து, அதில் டிக் செய்யப்பட்டவர்களை தொடர்பு கொண்டு பணம் வந்துள்ளதா என்பதை விசாரித்து வருகிறார்கள்.
இந்த பணிகளை கண்காணிப்பதற்காக இரண்டு தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எந்தெந்த பகுதியில் பணம் சரியாக செல்லவில்லை, சம்பந்தப்பட்ட உள்ளூர் பொறுப்பாளர் யார் என இவர்கள் செந்தில் பாலாஜிக்கு அறிக்கை கொடுப்பார்கள். அதனடிப்படையில் களையெடுப்பு நடவடிக்கை இருக்கும், என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்