/ செய்திகள் / சமூக வலைதளபிரசாரங்களை தடுக்க முடியாமல் திணறிய தேர்தல் கமிஷன்

சமூக வலைதளபிரசாரங்களை தடுக்க முடியாமல் திணறிய தேர்தல் கமிஷன்

சென்னை: ஓட்டுப்பதிவு முடியும் வரை, அரசியல் கட்சிகள் செய்த, 'ஆன்லைன்' பிரசாரத்தை, தேர்தல் கமிஷனால் தடுக்க முடியவில்லை. தமிழக சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பை, தேர்தல் கமிஷன் மார்ச் 15ம் தேதி வெளியிட்டது. அன்று முதலே, தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அரசியல் கட்சிகளின் பிரசாரம், ஏப்., 21ம் தேதி மாலை 6:00 மணிக்கு ஓய்ந்தது. தேர்தல் நடத்தை விதிகளின்படி, அதன்பின் பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது. ஆனால், ஓட்டுப் பதிவு முடியும் வரை, சமூக வலைதளங்களில் அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்து வந்தன. இதுகுறித்து, தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் கூறியதாவது: மேலோட்டமாக பார்த்தால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, தேர்தல் கமிஷனுக்குதான் எல்லா அதிகாரமும் இருப்பதுபோல் தெரியும். ஆனால், அது உண்மையல்ல. குறிப்பாக, சமூக வலைதளங்களில் செய்யப்படும் பிரசாரங்களை கவனித்து, நடவடிக்கை எடுக்க, தேர்தல் கமிஷனுக்கு போதிய ஊழியர்கள் இல்லை. கமிஷனுக்கு புகார் வரும்பட்சத்தில், அதுகுறித்து விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும். குற்றம் செய்தவர்களுக்கு, மூன்று மாதம் சிறை தண்டனை வழங்கப்படும். ஆனால், சமூக வலைதளங்களில், அரசியல் கட்சிகளின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் பிரசாரங்கள் செய்யப்படுவதில்லை. அதிகாரப்பூர்வமற்ற வகையில், அரசியல் கட்சிகளின் அனுதாபிகளால் செய்யப்படும் பிரசாரங்களை தடுப்பது சுலபமில்லை. லட்சக்கணக்கான பதிவுகளை ஆராய்ந்து, அவை தேர்தல் விதிகளை மீறியிருக்கிறதா என்று விசாரணை மேற்கொள்ள, குறைந்தது ஒரு ஆண்டாகி விடும். ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியாகி, அரசு பொறுப்பேற்கும் வரைதான், கமிஷனுக்கு அதிகாரமே இருக்கும். இதனால், சமூக வலைதளங்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பது முடியாத காரியம். எனவேதான், பிரசாரம் ஓய்ந்த பின்னும், சமூக வலைதளங்களில் மேற்கொள்ளும் பிரசாரத்தை தடுக்க முடியாமல், தேர்தல் கமிஷன் திணறுகிறது. இது தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்திய அளவில் தேர்தல் கமிஷன் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்னைதான். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !