ஆங்காங்கே புறக்கணிப்பு; ஓட்டுச்சாவடிகளில் அடிதடி! சிறுசிறு சலசலப்புகளுடன் முடிந்தது சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு
- நமது நிருபர் குழு -
ஏற்கெனவே அறிவித்ததை போல, ஆங்காங்கே தேர்தல் புறக்கணிப்பு, ஓட்டுச்சாவடிகளில் அடிதடி ரகளை என, சிறுசிறு சலசலப்புக்களுடன் தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நேற்று நடந்து முடிந்தது.
* மயிலாடுதுறை மாவட்டம், முதலைமேடு திட்டு, அண்ணா நகரில், சாலை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து தராததால், மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அங்கு, 8 பேர் மட்டுமே ஓட்டளித்தனர்.
* துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட, எட்டையபுரம் தாலுகா, குளத்துவாய்பட்டி கிராமத்தில், இலங்கை அகதி முகாமில் வசிப்பவர்களுக்கும், கிராம மக்களுக்கும் பல ஆண்டுகளாக பாதை பிரச்னை உள்ளது. போராட்டங்களால் தீர்வு கிடைக்காத நிலையில், தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவித்தனர். மொத்தம், 983 ஓட்டுக்கள் உள்ள நிலையில், அங்கு, 89 ஓட்டுக்கள் மட்டுமே பதிவானது.
* ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட பொட்டலுாரணி கிராமத்தில், கழிவு மீன் ஆலைகளை அகற்ற கோரி, தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவித்திருந்தனர். மொத்தம், 915 ஓட்டுக்களில், அங்கு, 197 ஓட்டு மட்டுமே பதிவானது.
* புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில், குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட வழக்கில், விசாரணையில் பாதிக்கப்பட்ட மக்களையே குற்றம் சாட்டி, மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து குற்றவாளியாக சித்தரிப்பதாக கூறி, அப்பகுதியில் நேற்று கருப்புகொடி கட்டி, சட்டசபை தேர்தலை புறக்கணித்தனர். அங்கு, பாதிக்கப்பட்ட, 62 பேர் ஓட்டு போடவில்லை.
* கரூர் மாவட்டம், நெரூரை சேர்ந்தவர் காமராஜ், 55; கிருஷ்ணராயபுரம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் ராஜாவுக்கு முகவராக இருந்தார். நேற்று காலை கிருஷ்ணராயபுரம் அரசு பள்ளி ஓட்டுச்சாவடியில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர், கூட்டத்தை ஒழுங்குப்படுத்த விசில் ஊதினார். காமராஜ், 'விசில் ஒரு கட்சியின் சின்னம் என்பதால், அதை ஓட்டுச்சாவடியில் ஊதக்கூடாது' என்றார். இதில், இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
* தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா, அரகாசனஹள்ளி பஞ்., எர்ரபட்டி கிராமத்தில், தி.மு.க., கிளை செயலர் ராஜா, 55, காங்., கட்சிக்கு ஓட்டு சேகரித்தார். அதே பகுதியை சேர்ந்த, த.வெ.க.,வினரும் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட போது, ராஜா மற்றும் த.வெ.க.,வினரிடையே மோதல் ஏற்பட்டு, இரு கட்சியினரும் தாக்கிக் கொண்டனர்.
* சேலம் வடக்கு தொகுதியின், 139வது ஓட்டுச்சாவடியான அரிசிபாளையம், நகரவை தொடக்கப்பள்ளியில், தி.மு.க., அனுதாபி லோகநாயகி, 46, அ.தி.மு.க., முகவர் கந்தசாமி, தன்னை அவதுாறாக பேசியதாக கூறி, ஓட்டுச்சாவடிக்குள் சட்டையை பிடித்து இழுத்து தாக்கினார்.
* திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதியில் ஓட்டுப்பதிவு மையம் அருகே இருந்த கட்சியினரை, திருச்சி எஸ்.பி.,யின் ஸ்டிரைக்கிங் போர்ஸ் தாக்கியதால், அப்பகுதி மக்கள் ஓட்டுப்பதிவை புறக்கணித்தனர். இதனால் அங்கு 4 மணி நேரம் ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது.
* தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், த.வெ.க., உறுப்பினர் ஓட்டை, கள்ள ஓட்டு போட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து, அவருக்கு 'சேலஞ்ச்' ஓட்டு போட அனுமதிக்கப்பட்டது.
* துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வ.உ.சி., நகரை சேர்ந்த காளியம்மாள், 31, என்பவரின் ஓட்டு கள்ள ஒட்டாக போடப்பட்டது. த.வெ.க.,வினர் புகாரில், காளியம்மாள் சேலஞ்ச் ஓட்டு செலுத்த, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
* தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தொகுதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அனீஷ் பாத்திமா, 25, என்பவர் மீது தி.மு.க.,வினர் கல்வீச்சு தாக்கியதால், எட்டு மாத கர்ப்பிணியான அவர் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
* வேலுாரில், த.வெ.க., மாடல் உடையில் ஓட்டு அளிக்க வந்த பெண் குறித்து ஆபாசமாக பேசிய தி.மு.க., முகவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, த.வெ.க., தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
* வேலுார், ரங்காபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச்சாவடியில் த.வெ.க., முகவர்களை தி.மு.க.,வை சேர்ந்த முகவர்கள் தாக்கி விரட்டியதாக தெரிகிறது. அச்சமடைந்த த.வெ.க., முகவர்கள் யாரும் ஓட்டுச்சாவடிக்கு வரவில்லை. சம்பந்தப்பட்ட ஓட்டுசாவடியில் மறு ஓட்டுப்பதிவு நடத்த, த.வெ.க.,வினர் தேர்தல் அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளனர்.
* திருநெல்வேலி, பாளையை சேர்ந்த, அ.தி.மு.க., பகுதி செயலர் சங்கர், 27, நேற்று அப்பகுதி ஓட்டுச்சாவடியை ஆய்வு செய்ய சென்ற போது, ஓட்டுச்சாவடி அருகே சிலர் மது அருந்திக் கொண்டிருந்தனர். சங்கர் அவர்களை அப்புறப்படுத்த முயன்றபோது, போதை நபர்கள், சங்கரை அரிவாளால் வெட்டினர். போலீசார் விசாரிக்கின்றனர்.
Advertisement

இந்த அடிதடி சலசலப்பு இது செய்யுற வாங்க பூராம் ஆளும் தரப்பினர். இவர்களை தேர்தலில் ராணுவத்தை அமர்த்தி நைய புடைத்து கவனித்தால் அடுத்த முறை ஒழுங்கா வந்தியா ஓட்டு போட்டியா அப்டின்னு இருக்க வேண்டும்