/ செய்திகள் / வாங்கிய காசுக்கு அளவாக கூவுங்கள்: கமலுக்கு அண்ணாமலை அட்வைஸ்

வாங்கிய காசுக்கு அளவாக கூவுங்கள்: கமலுக்கு அண்ணாமலை அட்வைஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவாரூர்: ''வாங்கிய காசுக்கு அளவாக கமல் கூவ வேண்டும்,'' என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.திருவாரூரில் நேற்று, பா.ஜ., வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த அவர் பேசியதாவது: திருவாரூர் தொகுதியில் கடந்த 1996ல் இருந்து 30 ஆண்டுகளாக தி.மு.க., வெற்றி பெற்று வருகிறது. ஆனால், பொருளாதாரத்தில் கடைசிக்கு முந்திய இடத்தில் தான் திருவாரூர் மாவட்டம் இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், நெல் கொள்முதலில் திருவாரூர் இரண்டாவது இடத்தில் இருந்தது; தற்போது 10வது இடத்தில் இருக்கிறது. நெல்லை பாதுகாக்க எந்த வசதியும் இல்லை. இதற்காக, மத்திய அரசு கொடுக்கும் நிதி கொள்ளையடிக்கப்படுகிறது. ஆனால், நெல்லை மத்திய அரசு வாங்குவதில்லை என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். உர மானியமாக 29,132 கோடி ரூபாய் மத்திய அரசு கொடுத்துள்ளது. அந்த உரத்தைக்கூட விவசாயிகளுக்கு கொடுப்பதில்லை. மத்திய அரசு, நெல் குவின்டாலுக்கு 2,369 ரூபாய் உயர்த்தி கொடுத்தது. இத்துடன் 105 ரூபாய் சேர்த்து கொடுத்து, 2,500 ரூபாய் வழங்கியதாக தி.மு.க., அரசு கூறி வருகிறது. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, பிரதமர் மோடியுடையது. மஞ்சப் பை தான் ஸ்டாலினுடையது. கோவில் வளர்ச்சிக்கான மத்திய அரசின் 'பிரசாத்' திட்டத்தில், திருவாரூருக்காக தி.மு.க., அரசு 1 ரூபாய் கூட பெறவில்லை. திருவாரூர் தியாகராஜர் கோவில் கமலாலய குளத்தை அசுத்தமாக வைத்துள்ளனர். இந்நிலையில், மாமன்னர் ராஜராஜ சோழனை விட, அமைச்சர் சேகர்பாபு அதிக குடமுழுக்கு செய்திருப்பதாக, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூறியுள்ளார். வாங்கிய காசுக்கு அளவாக கமல் கூவ வேண்டும். திருவாரூரில் எதிரணி சார்பாக போட்டியிடும் கலைவாணன் மீது கொலை வழக்குகள் உள்ளன. கலைவாணன் அண்ணன் மகன் கலைவேந்தன் மீது, தீண்டாமை வன்கொடுமை வழக்குகள் உள்ளன. நன்னிலத்தில் தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ., கட்சி தலைவர் முபாரக், கொரோனா காலத்தில் போலி மருந்தில் அரசு எம்பளத்தை போட்டு விற்றவர். கடந்த 2023ல் திருபுவனம் ராமலிங்கம் கொலையில், நேரடி தொடர்பு காரணமாக, முபாரக் வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பு ரெய்டு நடத்தியது. அவருக்கு ஒரு ஓட்டு போட்டாலும், அது இந்திய இறையாண்மைக்கு எதிராக போடப்படும் ஓட்டு. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !