/ வி.ஐ.பி., தொகுதி / வெய்ட் பழனிசாமி; வெயிட்டிங் செல்வகணபதி

வெய்ட் பழனிசாமி; வெயிட்டிங் செல்வகணபதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம் மாவட்டம் இடைப்பாடி, இத்தேர்தலில் தேசிய அளவில் எதிர்பார்க்கப்படும் சட்டசபை தொகுதி. பா.ஜ., - அ.தி.மு.க., இணைந்த என்.டி.ஏ., கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமி இங்கு போட்டியிடுகிறார். இத்தொகுதியில், பழனிசாமி ஐந்து முறை வென்றும், இருமுறை தோற்றும், லோக்சபா தேர்தலில், ஒருமுறை வென்றும், இருமுறை தோற்றும் ஆழமாக காலுான்றியுள்ளார். இங்கு, மொத்தமுள்ள, 2.74 லட்சம் ஓட்டில், வன்னியர்கள் 48 சதவீதத்துக்கு மேலும், கொங்கு வேளாள கவுண்டர், ஆதிதிராவிடர்கள், நாடார்கள் என்ற வரிசையில் பிற சமூகத்தினரும் உள்ளனர். தேர்தல் வரலாற்றில், 1967, 1971ல் மட்டும் தி.மு.க., வென்றது. 2006ல் தி.மு.க., ஆதரவுடன் பா.ம.க., வேட்பாளர் காவேரி வென்றார். மற்ற அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க.,வும் அதன் கூட்டணி கட்சிகளுமே வென்றுள்ளன. கொங்கு வேளாளர் என்பதால் அந்த சமூகத்தின் ஓட்டுகளும், வன்னியர் அல்லாத மற்ற சமூகத்தினரின் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஓட்டுகளில் 80 சதவீதமும் பழனிசாமிக்கு கிடைக்கும். பழனிசாமி முதல்வராக இருந்தபோது, இத்தொகுதியில் உள்ள கூட்டுறவு சங்க தலைவர் முதல் உள்ளாட்சி பிரதிநிதிகள் வரை, தன் சமூகத்தவருக்கே அதிகம் வாய்ப்பளித்தார். அதனால், பெரும்பான்மையினரான வன்னியர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இதனால், 2019 லோக்சபா தேர்தலில், இத்தொகுதியில் தி.மு.க., 8,088 ஓட்டுகளைக் கூடுதலாகப் பெற்றது. இதையறிந்த பழனிசாமி, வன்னியர்களுக்கு கட்சியிலும் மற்ற பொறுப்புகளிலும் பதவி அளித்து சரிக்கட்டினார். அதன் விளைவாக, 2024 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., 46,320 ஓட்டுகள் அதிகம் பெற்றது. இன்றைய நிலையில், பழனிசாமி மீதான அதிருப்தி ஓட்டுகளை அறுவடை செய்யும் அளவுக்கு தி.மு.க.,வில் மக்கள் செல்வாக்கு பெற்றவர் இல்லை. தொகுதிக்கு உட்பட்டவரை களமிறக்கினால் அவர் விலைபோகவும் வாய்ப்புள்ளது. அதனால் வெளியூர் நபரை களமிறக்க தி.மு.க., திட்டமிட்டுள்ளது. அந்த வெளியூர் நபர், தி.மு.க., சேலம் மேற்கு மாவட்ட செயலர் செல்வகணபதி என்கின்றனர் அக்கட்சியினர். அவர் தற்போது எம்.பி.,யாக இருந்தாலும் மாநில அரசியலில் ஆர்வம் இருப்பதால் அவருக்கு வாய்ப்பு வழங்கினால் போட்டி கடுமையாக இருக்கும் என்கின்றனர். இருவரில் யார் வென்றாலும் ஓட்டு வித்தியாசம் குறைவாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் தி.மு.க.,வில் பொதுக்குழு முன்னாள் உறுப்பினர் சுப்பிரமணியம், பழனிசாமியை ஏற்கனவே எதிர்த்து போட்டியிட்ட மாவட்ட துணை செயலர் சம்பத்குமார் ஆகியோரும் சீட் கேட்டுள்ளனர். தி.மு.க., கூட்டணி கட்சிகள் இங்கு போட்டியிட ஆர்வம் காட்டவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் வி.ஐ.பி., தொகுதி